ரமலான் பண்டிகையை இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:`இன்று ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு கடந்த 10ம் தேதி முதல் வருகிற 24ம் தேதி வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் `முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பீர்’ என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரோனா நோய் தொற்றும், அதை தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்த தருணத்தில், அனைத்து சமயங்களை சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றை குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். சிறுபான்மையின மக்கள் மீது திமுகவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்