மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

மேல்மலையனூர், அக். 4: மேல்மலையனூர் அங்களாம்மன் கோயிலில் நடந்த புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இங்கு மாதந்தோறும் அமாவாசை அன்று நள்ளிரவில் நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் மாநிலம் முழுவதும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி, நேற்றுமுன்தினம் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் சர்க்கரைப் பொங்கல், சுண்டல் உள்ளிட்ட நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பட்டு உடுத்தி உற்சவர் அங்காளம்மன் வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்திகோஷம் முழங்க அங்காளம்மனை வழிபட்டனர். புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து அமாவாசை தின ஊஞ்சல் உற்சவத்திற்காக இரவு 10:30 மணிக்கு மேல் பூசாரிகள் கோயில் வழக்கப்படி, உற்சவர் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

உற்சவத்தின் போது பரவசமடைந்த பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி அங்காளம்மனை வழிபட்டனர். அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பலத்த மழை பெய்த போதும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கைகளில் தீபமேந்தி அங்காளம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் உள்ளிட்ட பூசாரிகளும், மேலாளர் மணி, உள்துறை மணியம் குமார், காசாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் திருக்கோயில் பணியாளர்களும் செய்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு