மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 26: தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சேலம்-கொச்சி நெடுஞ்சாலை துறை சார்பில் கோவையை அடுத்த கணியூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வாகனம் செல்லும் வழித்தடத்தில், சுங்க கட்டணம் வசூல் செய்வது இல்லை. ஆனால், தற்போது சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். இதுபற்றி தங்களிடம் கடந்த 6.5.2024 மற்றும் 24.5.2024 ஆகிய தேதிகளில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்றுவரை அதே நிலை தொடர்கிறது. எனவே, இந்த வழித்தடத்தில் சுங்க கட்டணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இதேபோல், கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்காக மதுக்கரை, தொண்டாமுத்தூர், பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, உட்பிரிவு செய்யப்பட்டு, நெடுஞ்சாலை துறை மூலம் கிரயம் செய்து, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உட்பிரிவு செய்து, கணினி மூலம் நிலம் பதிவேற்றம் செய்து வழங்கப்படவில்லை. இப்பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதேபோல், இப்புறவழிச்சாலை திட்டப்பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்