மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காகவும், 20 மாவட்டங்களுக்கு குடிநீருக்காகவும் தண்ணீர் வழங்குகிறது மேட்டூர் அணை. தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணைக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாக உள்ளது. மிரட்டல் வரும் நேரங்களில் போலீசார் மேட்டூர் அணையில் வெடிகுண்டு சோதனை நடத்துவதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்துவர். மேலும் முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக அணையில் நிறுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மேட்டூர் அணை பூங்கா பல ஆண்டுகள் மூடப்பட்டு இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மேட்டூரில் இருந்து சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், மேட்டூர் அணையில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு 9 மணி அளவில் வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் மேட்டூர் அணை பூங்கா, அணையின் வலது கரை உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். ஆனால் இதில் வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மக்கள் எளிதில் சென்று வரும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். அதன்படி மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் இருந்தால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி