முறைகேடு செய்த பணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த தங்கமணி: மருமகனுக்கு 100 லாரிகள்; முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு

சென்னை: அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக சேர்த்த பணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையி்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தனது பணிக்காலமான 2016 மே 23 முதல் 2021 மே 6ம் தேதி வரை பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சட்ட விரோதமாக சொத்துக்களை தனது பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் வாங்கி குவித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதும் தெரிவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா கோவிந்தம்பாளையத்தில் மனைவி டி.சாந்தியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு டி.தரணிதரன் என்ற மகனும், டி.லதாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். தரணிதரன் சாரா என்பவரை திருமணம் செய்து சேலம் மாவட்டம் சோரமங்கலம், நெடுஞ்சாலை நகர், ராஜாபுரத்தில் தனது மாமியார் கலைராணி வீட்டில் வசித்து வருகிறார். தங்கமணியின் மகள் லதாஸ்ரீ பள்ளிப்பாளையம் காளியனூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரை திருமணம் செய்து அங்கு வசித்து வருகிறார்.தங்கமணிக்கு நாகரத்தினம் மற்றும் கிருஷ்ணவேணி என்ற 2 சகோதரிகள் உள்ளனர். நாகரத்தினத்தின் கணவர் எஸ்.பி.லோகநாதன், கிருஷ்ணவேணியின் கணவர் துரைசாமி. தங்கமணியின் தந்தை மறைந்த பெருமாள் ஜவுளி வியாபாரம் செய்துவந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தங்கமணி 2006ல் திருசெங்கோடு தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ல் குமாரப்பாளையம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2011 முதல் 2012வரை வருவாய்துறை அமைச்சராகவும் பின்னர் 2012 முதல் 2016வரை தொழில்துறை, எஃகு, கனிமவளத்துறை மற்றும் சிறப்பு செயலாக்க துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இதற்கிடையே 2015 முதல் 2016வரை போக்குவரத்து துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். 2016 மே 23 முதல் 2021 மே 6வரை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்தார்.ஊழல் தடுப்பு சட்டத்தில் கடந்த 2018ல் திருத்தம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தங்கமணி பொது ஊழியராவார். அவரது பதவிக்காலமான 2016 மே 23 முதல் 2021 மே 6வரை அவர் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தனது பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வாங்கியுள்ளார். இதன் மூலம் அவரது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2016ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலிலும் 2021 சட்டப் பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிட்டபோது தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது பெயரிலும், மனைவி மற்றும் மகன் பெயரிலும் உள்ள சொத்துக்கள் விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.தங்கமணியின் மகன் தரணிதரன் முருகன் எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் பெரிய அளவில் தொழில் செய்து வருகிறார் என்று வேட்புமனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த தொழில் வெறும் காகித அளவில்தானே தவிர அப்படி எந்த தொழிலும் நடைபெறவில்லை. இதன் மூலம் தங்கமணி சட்டவிரோதமாக வருமானத்தையும் சொத்துக்களையும் சேர்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்கமணியின் மனைவி சாந்தி எந்த வர்த்தகமும் செய்யாத நிலையில் கணவருக்கு உதவி செய்ததன் மூலம் சட்டத்தின் கண்களை  ஏமாற்றி சட்ட விரோதமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளார். பெரும்பாலான சொத்துக்கள் 2016 மே 23 முதல் 2020 மார்ச் 31 காலக்கட்டத்திற்குள்ளே சட்ட விரோதமாக வாங்கப்பட்டுள்ளது.  சட்ட விரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்கள் பட்டியல் விவரம் வருமாறு: தங்கமணி தனது மனைவி மற்றும் மகன் பெயரில் 2016 மே 23ம் தேதி நிலவரப்படி நகைகள், முதலீடுகள், வர்த்தகம், மோட்டார் வாகனங்கள், விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு நிலங்கள் என ரூ. 1 கோடியே ஒரு லட்சத்து 86,17 சொத்து வாங்கியுள்ளார். தனது மனைவி மற்றும் மகன் பெயரில் 2020 மே 31ம் தேதி நிலவரப்படி ரூ. 8 கோடியே 47 லட்சத்து 66,318க்கு நகைகள், முதலீடுகள், வர்த்தகம், மோட்டார் வாகனங்கள், விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு நிலங்கள் என சொத்து சேர்த்துள்ளார். தனது மனைவி மற்றும் மகன் பெயரில் 2016 மே 23 முதல் 2020 மார்ச் 31 வரையில் தொழில் வருமானம், வங்கி கடன், முதலீடு ஆகியவற்றின் மூலம் ரூ.5 கோடியே 24 லட்சத்து 86,617 பணம் சம்பாதித்துள்ளார். தனது மனைவி மற்றும் மகன் பெயரில் கடன் மற்றும் வரி என ரூ.2 கோடியை 64 லட்சத்து 78,335 செலவு செய்துள்ளார்.இந்த பட்டியலின் அடிப்படையில் 2016 மே 23 முதல் 2020 மார்ச் 31 வரையில் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் வாங்கியுள்ள சொத்துக்கள் வருமானத்திற்கு அதிகமாக வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 2016 மே 23 முதல் 2020 மார்ச் 31 ரூ.7 கோடியே 45 லட்சத்து 301 மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியுள்ளனர். 2016 மே 23 முதல் 2020 மார்ச் 31 வரை ரூ.2 கோடியே 60 லட்சத்து 8,282 சேமிப்பு வைத்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் தங்கமணி தனது மனைவி மற்றும் மகன் பெயரில் ரூ.4 கோடியே 85 லட்சத்து 72,019 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.இதனையடுத்து நடந்த ஆய்வில் தங்மணியின் மருமகன் தினேஷ்குமார்  மந்தாரோ நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் (நியூஸ் ஜெ) நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக பதவி வகித்து வருவதும், மெட்ராஸ் ரோட் லைன்ஸ், ஸ்மார்ட் டிரேட் லிங்க், ஸ்மார்ட் டெக், ஸ்ரீ பிளைவுட்ஸ் மற்றும் இன்பிரை புளு மெட்டல் ஆகிய நிறுவனங்களில் பங்குதாரராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. தினேஷ்குமாரின் தந்தை கே.சிவசுப்பிரமணியனுக்கு 100 லாரிகள் உள்ளன. எம்ஆர்எல் லாஜிஸ்டிக் என்ற பெயரில் தொழில் செய்து வருகிறார்.பள்ளிப்பாளையத்தில் ஜெயா பிளைவுட் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தங்கமணியின் மகள் லதாஸ்ரீ நடத்தி வருகிறார். மேலும் ஜெயஐ பில்ட் பிரோ என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும் செயல்பட்டு வருகிறார். தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெயரில் தங்கமணியும் அவரது மகனும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கியுள்ளனர். தங்கமணி 2016 மே 23 முதல் 2020 மார்ச் 31 காலக்கட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெயரிலும் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்துள்ளார். இதன் மூலம் பொது ஊழியரான தங்கமணி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. பெருமளவில் கிரப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றம் செய்துள்ளார். இந்த ஆய்வு மற்றும் விசாரணையின் அடிப்படையில் 2016 மே 23 முதல் 2018 ஜூலை 25 வரையிலான காலக்கட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக தங்கமணி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (குற்றத்தை தூண்டிவிடுதல்)  ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(2) 13(1) (இ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.தரணிதரன், சாந்தி ஆகியோர் 2018 ஜூலை 26 முதல் 2020 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் தங்கமணியை குற்றம் செய்ய தூண்டியதற்காக ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 12, 13(2) (13) (1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த முதல் தகவல் அறிக்கையின் அசல் நாமக்கல் தலைமை ஜுடீசியல் மாஸிஸ்திரேட் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் நகல் சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு சட்ட பிரிவு எஸ்பிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தங்கமணி தனது மனைவி மற்றும் மகன் பெயரில் ரூ.4 கோடியே 85 லட்சத்து 72,019 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை