முதல் நாளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை மட்டும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலானது: இன்று முதல் அதிக அபராதம்; போக்குவரத்து போலீசாருடன் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதம்

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் திருத்தப்பட்ட புதிய ேமாட்டார் வாகன சட்டம் நேற்று நடைமுறைக்கு வந்தது. முதல் நாள் என்பதால் அபராத பட்டியலுடன் விழிப்புணர்வு செய்யப்பட்டது. சில இடங்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக போக்குவரத்து போலீசாரிடம் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் பரவலாக காணப்பட்டது. பழைய மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து ஒன்றிய அரசு திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தில், போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமின்றி சட்டம் ஒழுங்கு எஸ்ஐக்களுக்கும் அபராதம் வசூலிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி புதிய அபராத கட்டணங்கள் வசூலிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 19ம் தேதி வெளியிட்டது. அந்த அரசாணைப்படி, முதல் முறை செய்யும் சாலை விதிமீறலுக்கு ஒரு அபராத கட்டணம், அதே விதிமீறலை மீண்டும் செய்தால் அதற்கு கூடுதலான ஒரு அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால், ரூ.1000 அபராதமும், இரண்டாவது அதேபோல ஈடுபடுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, சிக்னலை மதிக்காமல் செல்வோருக்கு 2வது முறை ரூ.1500ம், மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ்களில் ஈடுபடுவோருக்கு 2வது முறை ரூ.10 ஆயிரம், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோருக்கு 2வது முறை ரூ.1500ம்,  ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் என திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டபடி அபராத தொகை மற்றும் விதிமீறல்கள் குறித்து கணினி மற்றும் இ-செலான் கருவியில் பதிவேற்றம் செய்ய வேண்டி வரும் 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று காவல்துறை உயரதிகாரிகள் ஏற்கெனவே அறிவித்தனர். ஆனால், நேற்று முன்தினம் சென்னை மாநகர காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்துக்காக  மோட்டார்  வாகன சட்டத்தின் படி புதிய அபராத தொகை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நேற்று முதல் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து சிக்னல்கள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளிடம் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் முக்கிய அபராத கட்டணங்களை பதாகைகளில் எழுதியும் மற்றும் துண்டு அறிக்கைகள் விநியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்படி சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி சாலை, வடபழனி 100 அடி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் என 150 இடங்களில் நேற்று போலீசார் புதிய வாகன சட்ட அபராதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேப்பேரி உள்ளிட்ட சில இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதித்து அதை வாகன ஓட்டிகளிடம் வசூலித்தனர். மெரினா காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, இசிஆர் சாலை பகுதிகளில் போலீசாரிடம் அபராத தொகைஅதிகம் என  வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம்அரசாணை வாகன ஓட்டிகளிடம் காட்டி வாகன ஓட்டிகளை சமாதானம் செய்தனர். திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்திய முதல் நாள் என்பதால், நேற்று சென்னையில் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி பெரும்பாலான இடங்களில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் நாளை (இன்று) முதல் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் எந்த வித நிபந்தனைகளும் இன்றி புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் வசூலிக்கப்படும் என்று போலீசார் வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.* சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களிடம் ரூ.1000 அபராதம் வசூல்தமிழக அரசு அறிவித்த புதிய மோட்டார் வாகனச் சட்ட விதியின்படி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் என வாகன சோதனையில் அபராதம் விதித்து ரசீது வழங்கினார்கள். அப்போது, வாகன ஓட்டிகள் ரசீது வாங்க மறுத்தனர். மேலும் போக்குவரத்து போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென போலீசார் ஹெல்மெட் அணியாதவர்களிடம் 1000 ரூபாய் அபராதம் விதித்தது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நேற்று ஒரே நாளில் பூக்கடை காவல் சரகத்துக்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு