முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: ஓபிஎஸ் அறிவிப்பு

* நிரூபிக்காவிட்டால் எடப்பாடி ஓய்வெடுக்க வேண்டும் என கோரிக்கைசென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க. ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என்றும் அதை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறோம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் அறிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜேசிடி பிரபாகர், பி.எச்.பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்னை கீரின் வேஸ் சாலையில் கூட்டாக நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டாகும். ஸ்டாலினுடன் ஓபிஎஸ்  ரகசியமாக சந்தித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். நாங்கள் அரசியலை விட்டே விலகுவதற்கு தயாராக இருக்கிறோம். தான் சொன்ன தகவலை நிரூபிக்காவிட்டால் எடப்பாடி அரசியல் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும். எங்கள் சவாலை ஏற்பதற்கு எடப்பாடி தயாராக இருக்கிறாரா என்பது குறித்து அவர் உடனடியாக  பதிலளிக்க வேண்டும்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, திமுகவை எதிர்ப்பதில் என்றைக்கும் சளைத்தவரில்லை. திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, அதிக அறிக்கைகள் விடுத்தவர் அவர் தான். அவர் சரியான பாதையில் தான் பயணிக்கிறார். திமுகவை சரியான முறையில் எதிர்க்கும் தெம்பும் திராணியும் ஓபிஎஸ்க்கு தான் இருக்கிறது. எதிர்க்கட்சித்துணைத்தலைவர், ஓ.பன்னீர்செல்வம் தான் என்று சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தவரே எடப்பாடி தான். அதற்காக சட்டசபை புறக்கணிப்பும் வெளிநடப்பும் உண்ணாவிரதமும் தேவையற்றது. ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அதுப்பற்றி பேசுங்கள். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தான்எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி குறித்து கடிதம் கொடுத்தார்கள். எனவே எடப்பாடி நடத்தும் போராட்டங்கள் தேவையற்றது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்தும் அதன் தொடர்ச்சியான விசாரணை குறித்தும் அரசின் நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிறப்பான சிகிச்சையளிக்கவேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருந்தார். இதை அன்றைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோரிடம் நேரடியாக வலியுறுத்தினார். ஆனால், இரவு சந்தித்து விட்டு பின்னர் கூறுவதாக சொன்னவர்கள், திரும்ப அதுப்பற்றி எதுவும் சொல்லவில்லை. மேலும் அமெரிக்கா அழைத்து சென்று சிகிச்சையளிப்பதற்கு பதிலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிறந்த சிகிச்சையளிப்பதன் மூலம் ஜெயலலிதா வெகுவிரைவில் குணமடைந்து விடுவார் என்று டாக்டர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். எனினும் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தான் விரும்பினார். ஜெயலலிதா மரண தேதியில் நிலவும் முரண்பாடுகள் குறித்து, ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து அரசு நடத்தும் விசாரணைக்கு பின்னர் தான் தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்….

Related posts

பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது