முதலாம் உலகப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி மதுரையில் கண்டுபிடிப்பு

மதுரை : முதலாம் உலகப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி, மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பழமை வாய்ந்த அமெரிக்கன் கல்லூரியானது 1881ல் நிறுவப்பட்டு மதுரை பசுமலை பகுதியில் செயல்பட்டது. இதனையடுத்து 1909ம் ஆண்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் செயல்பட தொடங்கி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கன் மிஷினரி மூலமாக அடுத்தடுத்து புதிய கட்டிட்டங்கள் கட்டப்பட்டு, அதில் கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 111 ஆண்டுகளை கடந்த நிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். இந்த கல்லூரி முழுவதிலுமே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தத்ரூபமான கட்டிடங்களிலேயே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அமெரிக்கன் கல்லூரியில் 1912ல் கட்டப்பட்ட ஜேம்ஸ் ஹால் அரங்கானது 32 அடி உயர இரண்டு அடுக்கு கட்டிடத்தின் கீழ் உள்ள ஒரு அறையில் பல ஆண்டுகளாக பழைய பொருட்களை சேகரித்து வைக்கும் பகுதியாக இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் அந்த அறையை சுத்தம் செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்து, அதனை சுத்தம் செய்தபோது கட்டிடத்தின் கீழ் இருந்த அறையானது பதுங்கு குழி போன்ற அமைப்பில் இருந்துள்ளது. அதில் ஒரு நுழைவு பகுதியும், அதில் இருந்து வெளியேற 4 வழிகளும் இருந்தன. இதுகுறித்து வரலாற்று அறிஞர்களை அழைத்துவந்து காண்பித்தபோது அது பதுங்கு குழி என்பது தெரியவந்துள்ளது.1914-18 காலகட்டத்தில் நடைபெற்ற முதலாம் உலகப்போருக்கான பதற்ற காலத்திற்கும் முன்னதாக, 1912களில் கட்டப்படும் கட்டிடங்களில் மக்களை பாதுகாப்பதற்காக பதுங்கு குழிகள் அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அமெரிக்க மிஷனால் கட்டப்பட்ட கல்வி நிறுவனம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த பதுங்கு குழியானது 3 அறைகளை கொண்டதாகவும், பிரமாண்டமான அகலமாக கல்தூண்களும், 32 அடி உயர கட்டிடத்தை தாங்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாம்பன் ரயில்வே பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டின் நியூகர்சல் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட இரும்பு தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டு இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது.கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறும்போது, ‘‘இந்த பதுங்கு குழியில் பழமையான ஓலைச்சுவடி, நாணயம் மற்றும் மரங்களின் ஆயுட்காலம், மனித எலும்புக்கூடு உள்ளிட்ட பழமைத் தகவல்கள், பொருட்களை ைவத்து அருங்காட்சியகமாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இது பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட இருக்கிறது’’ என்றார்….

Related posts

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை

கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு

திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பலி