முட்புதர் மண்டி கிடக்கும் கால்வாய்

நல்லம்பள்ளி, ஜூன் 15: நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர், தொப்பூர் கணவாய் வழியாக தொப்பூர் நீர்ரோடை கால்வாயில் இணைந்து செல்கிறது. இதன் மூலம் அந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நீர் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்து வருகிறது. இந்த கால்வாயில் தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் வழியாக செல்லும் இடத்தில், அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள், குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நின்று, கழிவுநீராக மாறி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதுமட்டுமின்றி நிலத்தில் ஊறி நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயை தூர்வார வேண்டும் என, ஊராட்சி மன்ற தலைவரிடம், அப்பகுதி மக்கள் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் பொதுமக்களின் நலனுக்காக, நீரோடை கால்வாயில் உள்ள குப்பைகள் மற்றும் முட்செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை