முட்டுக்காடு படகுத்துறையில் மிதக்கும் உணவக கப்பல் கட்டுமானப்பணி: அமைச்சர் ஆய்வு

 

திருப்போரூர்: சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. இந்த படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான உணவகத்துடன் கூடிய 2 அடுக்கு மிதக்கும் கப்பல் விடப்பட உள்ளது. இந்த கப்பலில் தரைத்தளம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும். முதல் தளம் திறந்தவெளி உணவகமாக செயல்படும். தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மிதக்கும் உணவக கப்பல் செயல்பட உள்ளது. இதற்கான கட்டுமானப்பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

இந்நிலையில், கப்பல் கட்டுமான பணிகளை 2 மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்து வருகிறார். இதேபோன்று முட்டுக்காடு படகு குழாமில் நடைபெறும் கப்பல் கட்டுமானப் பணிகளை அமைச்சர் இராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் கமலா, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வு பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்த மிதவை கப்பல் முட்டுக்காட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இங்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள வேறு இடங்களிலும் செயல்படுத்தப்படும். இந்த மிதவை கப்பல்களில் தனியார் நிறுவனங்கள் தங்களின் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம். சிறிய அளவில் அலுவலக கூட்டங்கள், பார்ட்டி போன்றவற்றை நடத்திக்கொள்ளவும் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் படகு கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை