மீன் குழம்பு முதல் கேக் வரை அனைத்தும் பாரம்பரிய முறையில் சமைக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி நமக்கு மிகவும் பிடித்த சில நினைவுகளை உணவுடன் தான் நாம் தொடர்புப்படுத்திக் கொள்வோம். ஆரோக்கியத்திற்கு, சுவைக்கு, பொழுதுபோக்கிற்கு  என உணவே நம் வாழ்க்கையின் அடிப்படையாக இருக்கிறது. அதில் ஆரோக்கியமான உணவை எவ்வளவுதான் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அதைச் சமைக்கும் பாத்திரமும் முக்கியம் என்கிறார் கயல்விழி. இவர் வங்கியில் பணிபுரிந்து தற்போது எஸன்ஷியல் ட்ரெடிஷன்ஸ் என்கிற பாரம்பரிய சமையல் பாத்திரங்கள், சமையலறைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை இயக்கி வருகிறார்.‘‘எனக்கு முதல் குழந்தை பிறந்திருந்த நேரம், அமெரிக்காவிலிருந்து நாங்கள் சென்னைக்குத் திரும்பியிருந்தோம். குழந்தைக்கு நச்சுப் பொருட்கள் கலக்காத இயற்கையான உணவைக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து, இயற்கை உணவைத் தேடினோம். ஆனால் அப்போது இயற்கை உணவுகள் வாங்க சரியான விற்பனை நிலையங்கள் இல்லை. அதனால், நேரடியாக விவசாயிகளைச் சந்தித்து அவர்களிடமிருந்து இயற்கை உணவுப் பொருட்களை வாங்க ஆரம்பித்தோம். அதைப் பார்த்துச் சுற்றியிருந்தவர்களும் தங்களுக்கும் வாங்கிக் கொடுக்கச் சொன்னார்கள். இப்படி முதலில் எங்களுக்காக பின் நண்பர்களுக்காக என வளர்ந்து, கடைசியில் நானும் என் கணவர் ஸ்ரீதரும் இணைந்து ‘வேர் ஆர்கானிக்ஸ்’ என்ற ஆர்கானிக் கடையை 2013ல் ஆரம்பித்தோம். அதில் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கும் பொருட்களை அப்படியே விற்பனைக்கு வைத்தோம். ஆரம்பத்தில் நான் ஆர்டர் எடுத்து பேக் செய்ததும், அதை என் கணவர் டெலிவரி செய்வார். இப்படி இருவரில் மட்டும் ஆரம்பித்த இந்த தொழில், இப்போது சென்னையில் மட்டுமே மூன்று கிளைகளுடன், ஹைதராபாத், பெங்களூரில் கூட கிளைகள் தொடங்கியுள்ளோம்.தொடர்ந்து ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டு வந்தாலும், அதில் ஏதோ தவறவிடுவதை உணர்ந்தோம்.  உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல அதைச் சமைக்கும் பாத்திரங்களும் மிகவும் முக்கியம் என்பது அப்போதுதான் புரிந்தது. இரும்பு, களிமண், பித்தளை பாத்திரங்களில் சமைக்கும் போதுதான் உணவின் மொத்த ருசியும் ஊட்டச்சத்தும் நம் உடலுக்கு முழுவதுமாக போய்ச் சேரும். ஆனால் கலப்படமற்ற  பாத்திரங்களை தயாரிக்கும் கலைஞர்களைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலாய் இருந்தது. பலரும் சரியான வியாபாரம் இல்லாததால் அந்த தொழிலை கைவிட்டு இருந்தனர். மிச்சமிருந்த சிலரும் பண்டிகை நாட்களில், விழாக்களின் போது மட்டுமே குறைந்த பொருட்கள் தயாரித்து வியாபாரம் செய்து வந்தனர். அப்படி சில திறமையான அனுபவம் மிக்க கலைஞர்களை அணுகி, நகர வாழ்க்கைக்கு ஏற்ற சமையல் பாத்திரங்களை பாரம்பரிய முறையில் செய்து தரும்படி கேட்டோம்.அந்த கலைஞர்கள், வழிவழியாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள். மண்ணை பார்த்ததுமே அது திடமானதா  இல்லையா என்பதை கூறிவிடுவார்கள். தரமற்ற பொருட்களைத் தொடக் கூட மாட்டார்கள்.  அதனால் இந்த பொருட்கள் பல தலைமுறைகளாக இதே தொழிலில் இருக்கும் கைவினைக் கலைஞர்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. எந்தவொரு ரசாயனமும் பூசப்படாமல், நம் கலைஞர்களின் கைகளில் இந்த பாத்திரங்கள்தயாராகின்றன.இரும்பு, களிமண், கல், பித்தளை, செம்பு என அனைத்து விதமான பொருட்களில் சமையல் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதே போல அவற்றை வேலைக்குச் செல்லும் ஆண்களும் பெண்களும் சுலபமாக கையாளும் விதத்தில் பல வெரைட்டிகளிலும் தயாரிக்கிறோம். இரண்டு பேர் மட்டுமே இருக்கும் நியூக்லியர் குடும்பத்திற்குத் தகுந்த பாத்திரங்களும், கூட்டுக் குடும்பங்களுக்கு தகுந்த பாத்திரங்களும் கூட இங்குக் கிடைக்கும்.ராகி, தினை என மக்கள் ஆரோக்கிய உணவிற்கு மாறி வந்தாலும். அதே சமயம் இயற்கை சமையல் பாத்திரங்களை உபயோகிக்கும் போது அதன் முழு பயனையும் நாம் அடைகிறோம்’’ என்கிறார் கயல். ‘‘கொரோனாவிற்குப் பின் மக்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு பாத்திரத்திலும் ஒரு நன்மை இருக்கிறது. மண்சட்டியில் சமைக்கும் போது, நம் உடலில் இருக்கும் அமிலத்தன்மை குறையும். உடல் சூடு தணியும். இன்று பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ரத்த சோகைதான். எவ்வளவு ஆரோக்கியான டயட்டில் இருந்தாலும், அதைத்தாண்டி இந்த ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடுகிறது. இதற்கு சிம்பிளான ஒரு மாற்றத்தைச் செய்தாலே போதும். இரும்பு தோசைக் கல்லில் தோசை சுட்டு சாப்பிட்டாலே நம் உடலுக்கு இரும்புச் சத்து சேர்கிறது. காலப்போக்கில் இது ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.நாம் புதிய சமையல் பாத்திரங்களை வாங்கியவுடன் சமைக்க முடியாது. அதை முறையாக பதப்படுத்தி சமைக்க பக்குவப்படுத்த வேண்டும். எங்களுடைய பாத்திரங்கள் அனைத்துமே பதப்படுத்தப்பட்ட பின்னரே விற்பனைக்கு வரும். உதாரணமாக இரும்பு பாத்திரங்களை சுத்தமாகக் கழுவித் துடைத்து, அதன் உட்புறமும் வெளிபுறமும் நல்லெண்ணெய் தேய்த்து வெயிலில் வைப்போம். இதைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்ய வேண்டும். அடுத்து, மறுபடியும் பாத்திரத்தில் எண்ணெய் தேய்த்து மிதமான சூட்டில் அடுப்பில் வைக்க வேண்டும். இதை ஒரு வாரம் செய்து வர வேண்டும். இப்படி மூன்று வாரங்கள் இரும்பு பாத்திரங்களை பதப்படுத்தியதும், அவை எங்கள் விற்பனை நிலையத்திற்கு அனுப்பப்படும். அங்கே வாடிக்கையாளர்கள் சமையல் பாத்திரங்களை வாங்கியதும் உடனே சமைக்கலாம்.பல பேர் பாரம்பரிய சமையல் பொருட்களை வாங்க தயங்குவதற்கான காரணம் அதை முறையாக பதப்படுத்துவதில் இருக்கும் சிரமத்தால்தான்.  ஆனால் அந்த ஒரு சிறிய இடைவெளியைப் போக்கினால், பல மடங்கு நன்மை கிடைக்கும் என்பதால் நாங்களே பதப்படுத்தி பொருட்கள் விற்க ஆரம்பித்தோம். அதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.அடுத்தது, மண் சட்டியில் சமைக்கும் போது அதிக நேரம் ஆகும் என்றும் அதிக கேஸ் செலவாகும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். ‘‘மண்சட்டிகள் இயற்கையாகவே ஒரு முறை சூடேறினால் அது குறைய 10-15 நிமிடங்கள் ஆகும். குக்கரில் ஐந்து நிமிடத்தில் பருப்பு வெந்துவிடும். அதே பருப்பை சில நிமிடங்கள் அதிகமாக ஊறவைத்து சமைக்கும் போது மண்சட்டியிலும் அதே நேரத்தில் பருப்பு தயாராகிவிடுகிறது. இதனால், கேஸ் அணைத்துவைத்த பின் பத்து நிமிடங்கள் வரையிலும் கூட குழம்பு கொதித்துக்கொண்டேஇருக்கும். பழகப் பழக நேரமும், வேலையும் குறைந்துவிடும்’’ என்றார்.மக்களுக்கு இதன் நன்மைகளையும் ருசியையும் காட்ட, ஒரு சிறிய இடத்தில் பாரம்பரிய சமையல் பாத்திரங்களில் செய்த உணவை கொடுக்க வேண்டும் என்கிற எதிர்கால திட்டமும் ஆலோசனையும் இருப்பதாக கூறும் கயல்விழி, ‘‘தோசைக் கல்லை மட்டும் மாற்றினாலே அதில் அவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன. இதில் மேலும் ருசியான உணவைத் தயாரிக்கலாம் என்பது கூடுதல் பயன். கல் சட்டியில் செய்யும் தோசை – அடியில் மொறு மொறு என பேப்பர் ரோஸ்ட் போலவும், மேலே மிருதுவாகவும் இருக்கும்.மாவு கல் சட்டி எனப்படும் சோப்ஸ்டோன் பாத்திரங்களும் எங்களிடம் பிரபலம். தென் இந்தியாவில் நம் நாமக்கல் மாவட்டத்தில்தான் இது அதிகம் தயாராகிறது. அங்கு பலரின் வாழ்வாதாரமே இந்த தொழில்தான். இதில் பணியாரக்கல், தோசைக் கல் மற்றும் பல பொருட்கள் தயாராகின்றன. ‘‘இன்று பல பெண்களும் குழந்தைக்கு சோறூட்ட வெள்ளிப் பாத்திரங்களைவிட மண்சட்டி பானைகளையே விரும்புகின்றனர். பலரும் ஒரு முறை கடைக்கு வந்து இந்த பொருட்களைப் பார்த்த உற்சாகத்தில், தங்கள் மொத்த கிச்சனையும் பாரம்பரிய சமையல் பொருட்கள் கொண்டு மாற்றியமைக்க வேண்டும் என்பார்கள். ஆனால் முதலில் ஒரு பாத்திரத்திலிருந்து தொடங்க வேண்டும். தோசைக் கல், மீன் குழம்பு சட்டி, ஈயச் சொம்பு ரசம் என ஒரு பாத்திரத்தை மட்டும் வாங்கி வீட்டில் உபயோகித்துப் பாருங்கள். அதற்கு பழகியப் பின் ஒவ்வொன்றாக மாற்றிக்கொள்வது எளிதாகிவிடும்.நம் பாட்டிகள் பயன்படுத்திய கும்மிட்டி அடுப்பும் நல்லா விற்பனையாகிறது. அதை இன்றைய காலத்திற்கு ஏற்றார்போல மாற்றி பார்பெக்யூ , சீஸ் ஃபாண்ட்யு என க்ரியேட்டிவ்வாக பயன்படுத்தலாம். மேலும், இந்த பாத்திரங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள, நைலான் – ப்ளாஸ்டிக்கில் செய்யும் ப்ரஷ்களை தவிர்த்து,   தேங்காய், பனை நார்களில் செய்யப்படும் ப்ரஷ்களும் இங்கு விற்பனையாகின்றன. வெட்டிவேரில் செய்யப்பட்ட கை விசிறி, பித்தளை இட்லி பாத்திரம் , வெங்கலப் பானை உருளி என அனைத்து வகையான கிச்சன் பொருட்களும் இங்குள்ளது’’ என்றார் கயல்.செய்தி: ஸ்வேதா கண்ணன்படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Related posts

சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்!

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!