மின்சார வாரியத்தில் தான் உச்சகட்டமாக ஊழல் அதிமுக ஆட்சியில் எத்தனை மின்உற்பத்தி திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன: முதல்வருக்கு திமுக கேள்வி

சென்னை: மின்சார வாரியத்தில் தான் உச்சகட்டமாக ஊழல் நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் எத்தனை மின்உற்பத்தி திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன என்று முதல்வருக்கு திமுக கேள்வி எழுப்பியுள்ளது. திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசகர் மனுஷ்ய புத்திரன், செய்தித் தொடர்பாளர் ராஜிவ்காந்தி ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி திமுக ஆட்சிக்கு வந்தால் மின்சாரம் கிடைக்காது என்று பொய் கூறியுள்ளார். தற்போது தமிழக அரசு சொந்தமாக உற்பத்தி செய்யும்  மின்சாரம் முழுவதும் திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்கள் மூலம் கிடைத்தது. ஆனால் அதிமுக அரசு புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல் தனியாரிடம் இருந்து வாங்கி வருகிறது. அதிக விலைக்கு  தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவதால் 15 ஆண்டுகள் தமிழகத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களையும் முறையாக செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்தார்.  மத்திய பிரதேச அரசு 4 ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திடம் மின்சாரம் வாங்கும் போது, ஏன் தமிழக அரசு 7 ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்குகிறது. மின்சார வாரியத்தில் தான் உச்சகட்டமாக ஊழல் நடைபெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் எத்தனை புதிய மின்உற்பத்தி திட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பதை பழனிசாமி கூறவேண்டும். கொரோனா காலத்தில் கூட மின்சார கட்டணத்தை குறைக்காமல் மக்களை வாட்டியது அதிமுக அரசு. ஜெயலலிதா தீவிரமாக எதிர்த்த உதய் மின்திட்டத்தை பழனிசாமியும், பன்னீர்செல்வமும் உடனடியாக ஏற்று தமிழகத்தை அடகு வைத்தனர். மின்கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வரும் போதும் மின்சார வாரியம் கடனில் மூழ்கி வருகிறது. உதய் மின் திட்டத்தால் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முடியாது. மின்பாதையே இல்லாத நிறுவனங்களுக்குக் கூட அதிமுக அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது. மின்பாதை இல்லாததால் அந்த நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளாக தமிழகத்திற்கு இது வரை மின்சாரம் வழங்கவில்லை. இது தான் மின்மிகை மாநிலத்தின் லட்சணமா என்றனர்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்