மிகவும் மனவேதனை அளிக்கிறது… தஞ்சை தேர் திருவிழாவில் விபத்து குறித்து ஈபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல்!!

சென்னை : தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன்,சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில், வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர்  குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் , காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தஞ்சை களிமேடு அப்பர் கோயில் தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் மனவேதனை அளிக்கிறது; அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன்.  3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன். இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.சசிகலா தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், ‘தஞ்சை,களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியடையவைக்கிறது. இதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.இது போன்ற திருவிழாக்களின்போது சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் உரிய பாதுகாப்பை அளித்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் ‘ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை