மாவட்டத்தில் 10 ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு தேசிய தரச்சான்று

கிருஷ்ணகிரி, ஏப்.11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிறந்த மருத்துவ சேவைக்காக, 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 61 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் தளி, கெலமங்கலம், மூக்கண்டப்பள்ளி, சூளகிரி, வேப்பனஹள்ளி, எம்.சி.பள்ளி, ஜெகதேவி, கண்ணன்டஅள்ளி, சிங்காரப்பேட்டை, பாரூர், காவேரிப்பட்டணம், பாகலூர் ஆகிய 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக இயங்கி வருகின்றன. இங்கு தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக பிரசவங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. மாதத்திற்கு சுமார் ஆயிரம் குழந்தைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கின்றன. 600 பேர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க வரும் தாய்மார்களுக்கு, தொடர்ந்து 3 நாட்களுக்கு 3 நேரமும் உணவுகள் வழங்கப்படுகிறது. தரமான சிகிச்சை அளிப்பதால், புறநோயாளிகள் வருகையும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 12 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். இதனால், பொதுமக்கள் இரவு நேரத்திலும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 49 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் இயங்கினாலும், இரவு நேரத்தில் மருத்துவர்கள் வசதி இல்லை. செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ சேவையை அறிந்த டெல்லி இந்திய மருத்துவ கவுன்சில், தேசிய தரச்சான்று குழுவினர் மூலம், கடந்த நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நேரில் வந்து கள ஆய்வு நடத்தினர். இதில் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று, தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது. அதன்படி, பேகேப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – 95.4 மதிப்பெண்களும், ஆனந்தூர் -91, சிங்காரப்பேட்டை – 90.8, அனுமன் தீர்த்தம் -90.7, முத்தாலி – 89.57, அத்திமுகம் – 89.57, நாகமங்கலம் – 87.89, உத்தனப்பள்ளி – 84.28, மகனூர்பட்டி – 78.05, பெருகோபனப் பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் – 75.39 மதிப்பெண்கள் பெற்றதால், தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம், பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. இதனால், கர்ப்பிணி தாய்மார்கள் வருகை அதிகரித்துள்ளது. அதேபோல் புற நோயாளிகள் வரத்தும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேகப்பள்ளி உள்ளிட்ட 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது. மகப்பேறு மற்றும் குழந்கைள் பராமரிப்பு, தேவையான மருந்து,மாத்திரை இருப்பு வைத்து விநியோகம், நடமாடும் மருத்துவமனை, நோயாளிகளின் கோப்பு, பதிவேடு பராமரிப்பு, கட்டிடம், அடிப்படை வசதி, சுகாதாரமான மருத்துவமனை வளாகம், ஆய்வக வசதிகள், உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் சேவையை சிறப்பாக செய்ததற்காக, தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது. இதனால் போதுமான நிதிகள் பெறப்பட்டு, மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்த முடியும். ஒன்றிய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு தேசிய தரச்சான்று வந்துவிட்டது. விரைவில் தமிழக அரசு நிகழ்ச்சி நடத்தி சான்று வழங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை