மாவட்டத்தில் தக்காளி, மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தர்மபுரி, நவ.29: தர்மபுரி மாவட்டத்தில் சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் தக்காளி, பச்சை மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் ஓசூருக்கு அடுத்தபடியாக, தர்மபுரி மாவட்டத்தில் பசுமை குடில் அமைத்து, தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி, பூச்செடி நாற்றுகள் உருவாக்கி, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மானியத்தில் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பசுமை குடில்கள் உள்ளன. அதகப்பாடி, செக்காரப்பட்டி, இண்டூர், பி,அக்ரகாரம், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உள்ளன.

தற்போது தக்காளி, பச்சை மிளகாய் சந்தையில் நல்ல விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி உழவர் சந்தையில் ₹28க்கும், பச்சை மிளகாய் கிலோ ₹30க்கும் விற்பனை செய்யப்பட்டது. வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், விவசாயிகள் தக்காளி, பச்சை மிளகாய் நாற்றுகள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து விவசாயி சென்றாயன் கூறுகையில், ‘பசுமை குடில் வேளாண்மை மூலம், பாரம்பரிய விவசாய முறையை ஒப்பிடும் போது, 10 மடங்கு விளைச்சல் அதிகம். பசுமை குடில்கள் அனைத்து தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது. நோய் தாக்கம் குறைவு, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை, குறைந்த நீர், உரம் போதுமானது. தக்காளி, மிளகாய், கத்திரி, மலர், குடை மிளகாய் போன்ற எல்லா வகையான காய்கறிகளும், எல்லா வகையான மலர்களுக்கும் இக்குடில் உகந்தது. பசுமை குடில் அமைப்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் மானியம் வழங்குகிறது,’ என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை