மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு: மீனவர்கள் மகிழ்ச்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பத்தில் மீனவர்களை பாதுகாக்கும் வகையில் ரூ. 25 கோடியில் தூண்டில் வளைவு, வளை பின்னும் கூடம், மீன் இறங்கு தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதினர். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை, ஏற்று மீன் வள மானியக் கோரிக்கையில் ரூ. 25 கோடி நிதி ஒதுக்கி தூண்டில் வளைவு, வளை பின்னும் கூடம், மீன் இறங்கு தளம் பல்வேறு அம்சங்களுடன் அமைய உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனால், நெம்மேலி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ஈசிஆர் சாலையொட்டி, நெம்மேலி குப்பம் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களது பிரதான தொழில் மீன் பிடித்தல். இங்கு, சில ஆண்டுகளாக கடல் ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. இதனால், திடீரென கடலில் ராட்சத அலை எழும்பி பல அடி தூரத்திற்கு குடியிருப்பு பகுதிக்கு அருகே முன்னோக்கி வந்து தாக்கியதில் கடல் அரிப்பு ஏற்பட்டு, அங்குள்ள சிமென்ட் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்தது. மேலும், கடற்கரையொட்டி இருந்த தென்னை மரங்கள், மின் கம்பங்களும் முறிந்து விழுந்து காணாமல் போய் உள்ளன. நெம்மேலி குப்பத்துக்கு அருகே உள்ள சூளேரிக்காடு குப்பத்தை ஒட்டி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது. இந்த, ஆலைக்கு கடலில் இருந்து கடல் நீர் கொண்டு வருவதற்காக ராட்சத குழாய்கள் அமைக்க பல அடி தூரத்திற்கு பாறாங்கற்கள் கொட்டப்பட்டது.

மேலும், அங்கு கொட்டப்பட்ட கற்களால் அருகில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி, ராட்சத அலையின் தாக்கத்தால் கடல் பல அடி தூரத்திற்கு முன்னோக்கி வந்துவிட்டது. இதனால், அங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த இடவசதி இல்லாததால் சிரமப்பட்டனர். இதனால், ஒரு சில நேரங்களில் கரையில் நிறுத்தி வைக்கும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி உடைந்து கரை ஒதுங்குவது, அருகில் உள்ள சாலைகள், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் கடலுக்குள் அடித்து செல்வது தொடர் கதையாக இருந்தது. இந்நிலையில், தமிழக அரசு மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும், தூண்டில் வளைவு அமைக்க 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி கட்டிலில் இருந்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது வீடுகளின் மீது கருப்புக் கொடி கட்டி உண்ணாவிரதம் இருப்பது, கடலுக்கு செல்லாமல் கரை பகுதியில் கூட்டமாக அமர்ந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு நெம்மேலி மீனவர் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் திடீரென கடலில் இறங்கி மார்பளவு தண்ணீரில் நின்று கொண்டு உடனடியாக தமிழக அரசு எங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென கோஷம் எழுப்பி போராட்டாம் நடத்தினர். ஆனால், இதற்கு முன்பு இருந்த அதிமுக செவிசாய்க்கவில்லை. மேலும், அமைச்சர்களோ, எம்பி மற்றும் எம்எல்ஏக்களோ மேற்கண்ட பகுதிக்கு வந்து மக்களை சந்தித்ததுக்கூட இல்லை.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, மீனவ மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்வதற்காக முதல்வரின் நேரடி பார்வையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. மேலும், அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் போர்க்கால அடிப்படையில் தூண்டில் வளைவு ஏற்படுத்துவது, நெடுங்கல் கொட்டுவது, வளை பின்னும் கூடம் கட்டித் தருவது, புயல் மற்றும் பேரிடர் காலங்களில் வானிலை ஆய்வு மைய அறிக்கையை பின்பற்றி பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு, குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், கடந்தாண்டு மாண்டஸ் புயலுக்கு முன்பு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி மற்றும் அரசு துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டு பம்பரம் போல் சிறப்பாக செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது திருப்போரூர் விசிக எம்எல்ஏ பாலாஜி மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும், மீனவ மக்களை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு, பதிலளித்த மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஈசிஆர் சாலையில் உள்ள நெம்மேலியில் மீனவர்களின் வாழ்வாாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ரூ. 25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு, வளை பின்னும் கூடம், மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். சட்ட மன்ற கூட்டம் எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி நெம்மேலி பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்பகுதி மீனவர்கள் எங்களது பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜிக்கும் நன்றி தெரிவித்தனர். இது குறித்து, நெம்மேலி குப்பம் மீனவர்கள் கூறுகையில், ‘நெம்மேலி குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று, பிடித்த மீன்களை கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தால்தான் தங்களுக்கு வருமானம் கிடைக்கும். இங்கு, பல ஆண்டுகளாக கடல் ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து, கடல் பல அடி தூரத்திற்கு முன்னேறி வந்து தாக்கியதில் சிமென்ட் சாலை முழுவதும் சேதமடைந்தது.

இதனால், கரை பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு, பள்ளதாக்கு போல் காணப்படுகிறது. இந்த, நேரங்களில் கடலுக்கு செல்வதை தவிர்த்து வளைகளை பின்னுவோம். தற்போது, படகுகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, எங்கள் ஊருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்காமல், மீனவர்களுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வெற்றியாக பார்க்கிறோம்’ என்றனர்.

  • அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு மீனவர்கள் நன்றி

நெம்மேலி மீனவ குப்பத்தில் தூண்டில் வளைவு, வளை பின்னும் கூடம், மீன் இறங்கு தளம் ஆகியவை அமைவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினையும், துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை அடிக்கடி நேரில் சந்தித்து நெம்மேலி பகுதிக்கு தூண்டில் வளைவு அமைக்க முக்கிய காரணமாக இருந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

  • திருப்போரூர் எம்எல்ஏவுக்கு நன்றி

புயல் மற்றும் பேரிடர் காலங்களிலும், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும் கடல் வழக்கத்திற்கு மாறாக காணப்படுவது வழக்கம். அப்போது, காற்றின் திசையை பொருத்து மீனவர்கள் தங்களது படகுகளில் வெகு தூரம் செல்லாமல் குறிப்பிட்ட தூரம் மட்டும் சென்று மீன்பிடித்து வருவார்கள். இந்த நேரங்களில், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில், கடல் நீர் ஊருக்குள் செல்வது, இருந்த படகுகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது.

இதனை, தடுக்கும் பொருட்டும், மீனவ மக்களை பாதுகாக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி சட்ட மன்றத்தில் தனி ஆளாக நின்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தற்போது, மீன்வள மானியக் கோரிக்கையில் ரூ. 25 கோடியில் தூண்டில் வளைவு, வளை பின்னும் கூடம், மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என அமைச்சர் அனிதாா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதையடுத்து, மீனவர்கள் எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய எம்எல்ஏ பாலாஜியே என நன்றி தெரிவித்து வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி