மாநகராட்சி, கடலோர காவல் படை சார்பில் மெரினாவில் தீவிர தூய்மைப் பணி

சென்னை, செப்.17: சென்னை மாநகராட்சி மற்றும் கடலோரக் காவல் படை இணைந்து மெரினா கடற்கரையில் தீவிர தூய்மை பணி மேற்கொண்டது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும், மாதத்தின் 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ளிட்டவற்றில் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி மற்றும் கடலோரக் காவல் படை சார்பில், தீவிர தூய்மை பணி நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தீவிர தூய்மை பணியில் ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் காலி இடங்கள், மயானங்கள், நீர்வழித் தடங்கள், நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகள், அதிகம் குப்பைகள் உள்ளதாக கண்டறியப்பட்ட இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 70 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நமது குப்பை நமது பொறுப்பு என்பதனை உணர்ந்து பொது இடங்களிலும், நீர்நிலைகளிலும் தேவையற்ற கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தங்கள் இல்லங்களில் சேகரமாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கும்படி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்