மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டும்: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். வடதமிழகம் மற்றும் புதுச்சேரி நோக்கி மாண்டஸ் புயல் நகர்ந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காவல் துறை, தீயணைப்பு துறை, வானிலை ஆய்வு மைய இயக்குநர், முப்படை அதிகாரிகள், வருவாய், வேளாண், பள்ளி மற்றும் கல்லூரி உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தலைமை செயலாளர் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சென்னை கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கன மழை இருக்கும் என்பதால் மெரினா மற்றும் பெசன்ட்நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதேபோன்று சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரமும் அதிகாரிகள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். அவசர உதவி மற்றும் புகார் தெரிவிக்க 1913 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்