மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கூறி பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு கலாஷேத்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், நடனத்துறை முன்னாள் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரை பணிநீக்கம் செய்து கடந்த ஏப்ரல் மாதம் 31ம் தேதி கலாஷேத்ரா அறக்கட்டளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஹரி பத்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கலாஷேத்ரா அறக்கட்டளை பிறப்பித்த இந்த உத்தரவு சட்டவிரோதமானது. தனக்கு எதிரான புகார்கள் தவறானவை என்பதால் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்