மழையின் காரணமாக தடைபட்ட பாலம் கட்டுமான பணி துவக்கம்

 

திருப்பூர், ஜூன் 7: திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் யூனியன் மில் சாலையை இணைக்கும் பாலம் பழுதடைந்து காணப்பட்டது. இதன் காரணமாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. மழையின் போது நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததால் பாலம் வெள்ள நீரில் மூழ்கி போக்குவரத்து தடைப்படும்.

இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்மட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கிய நிலையில் நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக சில நாட்கள் பாலம் கட்டும் பணி தடைப்பட்டது. மீண்டும் பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழை காரணமாக நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ள நீர் பெருக்கெடுத்தது.

இதன் காரணமாக 10 நாட்களுக்கு மேலாக பாலம் கட்டுமான பணி தடைப்பட்டது. நொய்யல் ஆற்றின் ஓடும் தண்ணீரை ஒரு பகுதியில் திருப்பி விடப்பட்டு அஸ்திவாரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் மழையால் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்து நொய்யலில் செல்லும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை