மராத்தா தீர்ப்பு எதிரொலி தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:  மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டு ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு   உச்சநீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் கவனிக்கத்தக்கவை. “கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தளர்த்துவதற்கான  அசாதாரண சூழல் மராட்டிய மாநிலத்தில் இல்லை. மராட்டியத்தில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக இடஒதுக்கீடு வழங்குவதற்கான தேவை என்ன இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் மராட்டிய அரசு நிரூபிக்கவில்லை’’ என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பில் கூறியிருக்கிறது. இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 சதவீத உச்சவரம்புக்கும் கூடுதலாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வரும் மாநிலங்களில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்கதாகும்.  மராத்தா சமூக இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்றம் கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள இது குறித்த வழக்கில், சமூகநீதிக்கு எதிரான சக்திகள் வாதிடக்கூடும். எனவே, தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில்   சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை அமைத்து, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும். அதை உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது தெரிவித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

சொல்லிட்டாங்க…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மநீம கடும் எதிர்ப்பு: பொதுக்குழுவில் தீர்மானம்

திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு: அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது