மரங்களில் வெள்ளை ஈக்கள் பாதிப்பு: வேளாண்துறை ஆலோசனை

 

காரைக்குடி, நவ.28: வே ளாண் உதவி இயக்குநர் அழகுராஜா தெரிவித்துள்ளதாவது, தென்னையில் வெள்ளை ஈ தாக்கம் ஆங்காங்கே காணப்படுகிறது. இத்தாக்குதலின் அறிகுறிகள் வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிறமுள்ள நீள்வட்ட முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் ஓலையின் அடிப்பகுதியில் இடும். மேலும் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த ஈக்கள் ஓலைகளில் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சுவதுடன் இவை வெளியேற்றும்.

தேன்போன்ற திரவம் கீழ்மட்ட ஓலைகளில் படிந்து அதன்மேல் கேப்னோடியம் என்ற கரும்பூசணம் படர்வதனால் ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. இப்பூச்சிகள் தென்னையை தாக்குவது மட்டுமில்லாமல் வாழை, கொய்யா, சப்போட்டா ஆகிய பிற பயிர்களையும் தாக்குகிறது. இதன் பாதிப்பு வீரிய ஒட்டு ரகங்களில் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க விட வேண்டும்.

கிரைசோபெர்லா, என்கார்சியா போன்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 400 என்ற அளவில் வெளியிட்டு கட்டுப்படுத்தலாம் என்றார். துணை வேளாண்மை அலுவலர் சேகர், உதவி வேளாண்மை அலுவலர் வசந்த், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன், உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழரசி ஆகியோர் செயல்விளக்கம் அளித்தனர்.

Related posts

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது