மன்னார்குடி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் அவலம்

மன்னார்குடி: மன்னார்குடி அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை-பாலம் வசதி இல்லாததால் மூதாட்டியின் உடலை ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் ஊராட்சியில் சாந்தாமாணிக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு சுடுகாடு இதே கிராமத்தில் உள்ளது. ஆனால் சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை. மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையின் குறுக்கே ஆறு செல்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு செல்ல ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.இந்த நிலையில் சாந்தாமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மனைவி சீதாலட்சுமி(80) நேற்று முன்தினம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். நேற்று மாலை சீதாலட்சுமியின் உடல் இறுதி சடங்கிற்கு பின்னர் சாந்தாமாணிக்கம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. உரிய சாலை வசதி இல்லாததால் புதர் மண்டிய மண் சாலை வழியாக மூதாட்டியின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் சுடுகாட்டுக்கு தூக்கி சென்று மூதாட்டியின் உடலை தகனம் செய்தனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,இப்பகுதியில் சாலை மற்றும் பாலம் வசதி இல்லாமல் இறந்தவர்களின் உடல்களை ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீர் கொண்டு சென்று தகனம் செய்யும் அவல நிலை உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் சாந்தாமாணிக்கம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்ல உடனடியாக சாலை மற்றும் பாலம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்….

Related posts

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!