மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை முயற்சி

சின்னசேலம், ஆக.19: சின்னசேலம் அருகே மனைவியை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அருகே உள்ள கல்லானத்தம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் அருணாச்சலம் (72), இவருடைய மனைவி ரத்தினம் (65). இவர்களுக்கு சுப்ரமணியன் (52) என்ற ஒரே மகனும் மருமகள் மோகனா, விமல் என்ற பேரனும், புனிதா என்ற பேத்தியும் உள்ளனர். இவர்கள் அனைவரும் காட்டுக்கொட்டாயில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அருணாச்சலத்துக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி கோயமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் அடிக்கடி கோபப்பட்டு அருகில் கிடக்கும் பொருட்களை எடுத்து மற்றவர்கள் மீது வீசி எறிவாராம். இதை வீட்டில் உள்ளவர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அருணாச்சலமும் அவரது மனைவி ரத்தினமும் அதே வீட்டில் தனியாக சமைத்து சாப்பிட்டு வசித்து வந்துள்ளனர். நேற்று காலை 7 மணியளவில் அருணாச்சலத்தின் மகன் சுப்ரமணியன் தன் மனைவி மோகனா, மகன் விமல் ஆகியோருடன் சேர்ந்து மரவள்ளி விதை குச்சி வாங்க சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறைக்கு சென்றுவிட்டார். பேத்தி புனிதா கல்லூரிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அருணாச்சலமும் அவரது மனைவி ரத்தினமும் தனியாக இருந்துள்ள நிலையில் சுப்ரமணியனுக்கு சொந்தமான வயலில் உள்ள வேப்பமரத்தடியில் மனைவி ரத்தினத்தை அருணாச்சலம் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு விவசாய நிலத்துக்கு பயன்படுத்தும் களைக்கொல்லியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் அருணாச்சலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சுப்ரமணியனின் தாய் ரத்தினம் வயலில் காயமடைந்து இறந்து கிடப்பதாக பக்கத்து நிலத்துக்காரரான செல்வராஜ் தகவல் கொடுத்ததையடுத்து சின்ன சேலம் காவல்நிலையத்தில் சுப்ரமணியன் புகார் அளித்ததையடுத்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து