மனித உருவத்துடன் பழங்கால செப்பு நாணயம் கண்டுபிடிப்பு

சேலம் : மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட மனித உருவம் பொறிக்கப்பட்ட பழங்கால செப்பு நாணயம் கிடைத்திருப்பதாக சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க வரலாற்று ஆய்வாளர்கள், நாடு முழுவதும் இருந்து பழங்கால நாணயங்களை சேகரித்து வருகின்றனர். சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் நடந்த நாணயவியல் கண்காட்சியில் மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்களை குஜராத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். அந்த நாணயங்களை சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க வரலாற்று ஆய்வாளர் சுல்தான் வாங்கி வந்துள்ளார். வழக்கமாக அக்கால மன்னர்கள் வெளியிட்ட செப்பு நாணயங்களில் காளை, பசு, தேர், கப்பல் போன்ற உருவங்கள் இருந்தன. ஆனால், இந்த செப்பு நாணயத்தில், மனித உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த செப்பு நாணயம் குறித்து வரலாற்று ஆய்வாளர் சுல்தான் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறோம். இதுவரையில் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற நாணயங்களில் மனித உருவம் தவிர பிற உருவங்களே இருந்துள்ளன. அதிலும் தமிழ் மொழி பொறிக்கப்பட்ட செப்பு நாணயங்களில், மனித உருவம் கிடைக்கப்பெற்றதில்லை. முதன்முறையாக இந்த நாணயம் கிடைத்திருக்கிறது. மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் 1731ல் காலமானார். அவருக்கு பிறகு அவரது மனைவி மீனாட்சி 1732முதல் 1756வரை ஆட்சி செய்தார். இந்தவகையில்  மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி இந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார். ‘‘தமிழனின் விஞ்ஞான ஊன்று வேக விசை பயண வண்டி’’ நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த பயண வண்டியில் மனித உருவம், ஊன்றை பிடித்தபடி இருக்கிறது. இந்த செப்பு நாணயம் மிகவும் அரிதாகும். காரணம், இதுவரையில் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான செப்பு நாணயங்களில் மனித உருவம் இல்லை. ஆனால், மதுரையை ஆட்சி புரிந்த மீனாட்சி, மனித உருவத்தில் நாணயத்தை வெளியிட்டிருக்கிறார். கோயில் சிற்பங்களில் இத்தகைய உருவங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற உருவத்தில் நாணயத்தையும் அக்காலத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் நாணயவியல் கண்காட்சிகளில் இந்த செப்பு நாணயத்தை காட்சிப்படுத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். …

Related posts

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்திய விமானப்படையின் ஏர் ஷோ சென்னை குலுங்கியது: 15 லட்சம் பேர் பரவசம்

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து