மதுரை கோர்ட்டில் கைதியை போட்டோ எடுத்தவர் கைது

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், கைதியை போட்டோ எடுத்ததுடன் அதை கேட்ட காவலர்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை புனித தோமையார் மலை காவல் நிலையத்தில் ஆயதப்படை காவலராக பணிபுரிபவர் பாபுலால். இவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த பிப்.19ம் தேதி நானும், என்னுடன் பணிபுரியும் காவலர்கள் சண்முகராஜ், அக்கில்குரைசி, பிரேம்குமார் ஆகியோர் புழல் சிறையில் உள்ள கார்த்திக் என்பவரை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பஸ் மூலம் கிளம்பினோம். இரவு தங்குவதற்காக கார்த்திக்கை திண்டுக்கல் மாவட்ட சிறையில் ஒப்படைத்தோம். பிப்.20ம் தேதி காலை திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து கார்த்திக்கை மீண்டும் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றோம். நான்காவது நடுவர் நீதிமன்ற வளாகம் முன்பு நின்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கைதி கார்த்திக்கை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். அவரிடம நான் நீதிமன்றத்திற்குள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்ககூடாது எனக்கூறி செல்போனை வாங்கி வைத்து கொண்டேன். இதனால் அந்த வாலிபர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடம் விசாரித்தில் வண்டியூர் பெருமாள் கோவில் 2வது தெருவை சேர்ந்த இளங்கோ (21) என்பது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இளங்கோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்