மதுராந்தகத்தில் செல்லியம்மன் கோயில் ஆடி திருவிழா: ஊரணி பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

 

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் உள்ள சேற்றுக்கால் ஸ்ரீபிடாரி செல்லியம்மன் கோயிலில், ஆடி மாத உற்சவ விழா கடந்த 18ம் தேதி அம்மனுக்கு அபிஷேகம் செய்து காப்பணிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து, 13 தினங்களாக இரண்டு கால அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் நடைபெற்றன. இந்த விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும், நேற்று காலை ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மங்கல இசையுடன் மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், பழங்கள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் அம்மனுக்கு செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று இரவு மின் விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் சேற்றுக்கால் செல்லியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கோயிலின் எதிரே 200க்கும் மேற்பட்ட ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மேலும், வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை