மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டத்துக்கு விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: 30 மாதங்களில் பணிகள் நிறைவடையும்; தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்

சென்னை: பிரதமரின் கதி சக்தி  (அதி விரைவு) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி சோமசேகர், சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுனில் பாலிவால், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி சோமசேகர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரவாயல் – துறைமுகம் இடையே 20.656 கி.மீ., தூரத்துக்கு ரூ.5,855 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள பறக்கும் சாலை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இந்த திட்டத்துக்கு  விரைவில் தமிழக அரசு, சென்னை துறைமுகம், கடற்படை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மதுரவாயல் – துறைமுகம் இடையேயான பறக்கும் சாலையில் நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைய உள்ளது. இந்த திட்டத்துக்காக ஏற்கனவே நீர்வழித்தடங்களில் போடப்பட்ட தூண்கள் அகற்றப்பட்டு, புதிய தூண்கள் கரையோரங்களில் அமைக்கப்படும். இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து 30 மாதங்களில் பணி நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வரும். தொடர்ந்து சேலம் – சென்னை இடையேயான விரைவுச்சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 7 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்கவும், தொழில் வளர்ச்சிக்கும் புதிய விரைவுச்சாலை பயன்படும். இவ்வாறு அவர் கூறினார். …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு