மண்டல பூஜைக்காக இன்று நடை திறப்பு சபரிமலையில் குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்:  மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் நாளை முதல் சபரிமலையில் மண்டல காலம்  தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் தற்போது பொறுப்பில் உள்ள மேல்சாந்தியான பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடை திறப்பார். இதன்பின் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.சபரிமலை புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரியும் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். மண்டல காலம் தொடங்கும் கார்த்திகை 1ம் தேதியான நாளை (17ம் தேதி) இந்த புதிய மேல்சாந்திகள் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில் நடை திறந்து பூஜைகளை நடத்துவார்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்கள் தலைமையில் தான் சபரிமலையில் முக்கிய பூஜைகள் நடைபெறும்.பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும். பக்தர்களை வரவேற்க சபரிமலை தயாராகிவிட்டது. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக கேரளாவில் நிலக்கல், கொட்டாரக்கரை, பந்தளம், திருவனந்தபுரம், குமுளி உள்பட 13 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. 4 வருடங்களுக்குப் பின்னர் புல்மேடு மற்றும் கரிமலை பாதை திறக்கப்பட்டுள்ளது. இன்று நடை திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.*உடனடி முன்பதிவு செய்யப்படும் இடங்கள்திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோயில், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை மகா கணபதி கோயில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பந்தளம், நிலக்கல் தர்மசாஸ்தா கோயில், பம்பை-வலியானவட்டம், ஆலப்புழா மாவட்டத்தில் செங்கணூர் ரயில் நிலையம், கோட்டயம் மாவட்டத்தில் எருமேலி கோயில், ஏற்றுமானூர் மகாதேவர் கோயில், வைக்கம் மகாதேவர் கோயில், எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் கீழில்லம், இடுக்கி மாவட்டத்தில் குமுளி ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன….

Related posts

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்