மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் சூழல் இல்லை

சென்னை:  சென்னை, தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் நடைபெற்ற கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர்  டாக்டர் ஹேமலதா, கல்லூரி முதல்வர் டாக்டர் ஷனாஜ் அஹமத் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: ஒமிக்ரான் குறித்து பதற்றம் தேவையில்லை, ஆனால்  அதை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். தனி நபர் இடைவெளி, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனும் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம். ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து இதுவரை 20 விமானங்கள் வந்துள்ளன  பாதிப்பற்ற நாடுகளிலிருந்து 85  விமானங்கள் வந்துள்ளன. மொத்தம் 12,188 பேருக்கு சோதனை செய்துள்ளதில், 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் மூவரும் நலமாக உள்ளனர். இவர்கள் மூவருக்கும் ஒமிக்ரான் இருக்க வாய்ப்பு குறைவு என மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது. தடுப்பூசிக்காக கூவிக் கூவி அழைக்க வேண்டியிருப்பது வேதனையைத் தருகிறது.ஒமிக்ரான் சந்தேகம் உள்ளோரின் மாதிரிகளை தமிழகத்திலும் பரிசோதனை செய்கிறோம், மத்திய வைராலஜி ஆய்வு கூடத்திற்கும் அனுப்பி வருகிறோம். மூன்றாம் அலை வந்தாலும், வராவிட்டாலும் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. ஊரடங்கால்  2 ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள் போதும், சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. தற்போது தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இல்லை. எனினும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறும் வலியுறுத்தல்களை பொறுத்து முடிவு செய்வோம் என்றார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை