‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2.7.21ம் தேதி துறைரீதியிலான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் தொற்றுநோயற்ற நோய்களை கையாள்வதற்கும் பயனாளிகளின் வீட்டு வாசலில் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகளை நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் உத்தரவுகளை பிறப்பித்தார். முதல்வரின் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்காக தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஹெல்த் சப் சென்டர்களுக்கு மருந்துகளை எடுத்துச்செல்ல ஒருவாகனம் வாடகைக்கு எடுக்கப்படும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு மருந்துகளின் வீட்டு விநியோகத்திற்காக பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு பிராண்டட் மருந்து பெட்டி ஒருமுறை வழங்கப்படும். திட்டத்தின் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 50 யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் பிளாக்குகளில் 1172 சுகாதார மையங்கள், 189 ஆரம்ப சுகாதார மையங்கள், 50 சமூக சுகாதார மையங்கள் உள்ளடங்கும். கூடுதலாக இந்த திட்டம் திருநெல்வேலி, கோவை மற்றும் சென்னை மாநகராட்சிளில் 21 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொண்டுவரப்படும். 2021ம் ஆண்டில் இறுதியில் மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் தற்போதைய செலவு தவிர இந்த திட்டம் ஆண்டுக்கு ரூ.257,15,78,350 செலவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டங்களில் பல்வேறு நிலை சுகாதார நிறுவனங்கள், மாநிலத்தின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு அமைப்பு மூலம் திட்டத்தை செயல்படுத்த பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநகரத்திற்கு அங்கீகாரம் அளிக்கவும், தமிழ்நாடு தேசிய சுகாதார திட்டத்தின் தொற்றுநோயற்ற நோய்கள் செல் மூலம் திட்டத்தை கண்காணிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை கவனமாக ஆராய்ந்த பிறகு மேற்கண்ட திட்டத்தை தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனரிடமிருந்து ஏற்றுக்கொள்ளவும், பின்வருபவற்றின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் மூலம் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்த அனுமதிக்கப்படுகிறது. சிஏபிடி கூறுகளை செயல்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இது டயாலசிஸ் பைகளை வழங்குவது முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. 2021-22ம் ஆண்டுக்கு தேசிய சுகாதார மிஷன் அளித்த நிதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நிதித்துறையின் இணக்கத்துடன் பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு