மகா சிவராத்திரி விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மகா சிவராத்திரி சிவனுக்குரிய விரதமாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.  ஆண்டுதோறும் மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவராத்திரி அன்று ஒருநாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு, சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து, சிவன் பெயரை உச்சரித்து வந்தால், ஒரே நாளில் ஓர் ஆண்டுக்கான பலன் நமக்கு கிடைக்கும். அதனால் தான் சிவராத்திரி விரதம் சிறந்த பலனை கொடுக்கிறது என்று கூறப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இரவு முழுவதும் கண்விழித்து சாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், கைலாசநாதர், புண்ணியகோட்டீஸ்வரர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், மணிகண்டேஸ்வரர், இரவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர், நகரீஸ்வரர் உள்பட பல சிவன் கோயில்களில் நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவனுக்கு 6 கால சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவனை தரிசனம் செய்தனர். கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம்,  கலைநிகழ்ச்சிகள், தெய்வபக்தி பாடல் கச்சேரி நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து வழிபாடு நடத்தினர். இதுபோல் உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட சிவன் கோயில்களில் மகா சிவாராத்தியையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது.27 நட்சத்திர கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி அத்திவிருட்சத்தினால் உறுவாக்கப்பட்ட அத்தி விருட்ச லிங்கத்தில் 27 நட்சத்திரங்களுக்கான பல முகங்களை கொண்ட 1,00,008 ருத்ராசங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட அத்தி விருட்ச ருத்ராக்ஷ ஈஸ்வரருக்கு தீப, தூப நெய்வேத்ய ஆராதனைகள், அன்னதானம் ஆகியவைகள் நடந்தன. விழாவில் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்துக்கொண்டார்கள். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். மாதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் மகாசிவராத்திரி விழா நடந்தது. ஞானலிங்கம், நந்திபகவான் ஆகியவற்றுக்கு 4 கால பூஜை, யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 7 ஆண்டுகளாக தவத்தில் இருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா சுவாமிகளுக்கு சித்தர்களின் மரபுவழி வந்த பக்தர்களின் 4 கால பூஜை நடத்தப்பட்டது. விழாவில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்