போலீசார்-தேமுதிகவினரிடையே வாக்குவாதம்

மேட்டூர், ஆக.23: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே செங்காட்டூர் பிரிவு சாலையில் நேற்று அக்கட்சியினர் கொடிக்கம்பம் நட முயன்றனர். இதற்கு அப்பகுதியில் வசித்து வரும் கலையரசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதிக்கு மேச்சேரி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, வேறு இடத்தில் கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளனர். ஆனால், சேலம் மாவட்ட தேமுதிக செயலாளர் சுரேஷ்பாபு, மாநில மகளிரணி செயலாளர் மாலதி ஆகியோர் மறுப்பு தெரிவித்து, ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் தான் நடுவோம் எனக்கூறி கம்பத்தை தூக்கி நிறுத்த முயன்றனர்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் எதிர்ப்பினை மீறி கொடிக்கம்பம் நட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். திடீரென அங்கிருந்த உயர்மின் கோபுரத்தில் மளமளவென ஏறினார். தொடர்ந்து கீழே குதிப்பதாக கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிகவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் உயர் மின் கோபுரத்தில் ஏறிய நபரை போலீசார் சமாதானம் செய்து கீழே இறக்கினர். அவர் இறங்கியவுடன் மீண்டும் கொடிக்கம்பம் நடும் முயற்சியில் தேமுதிகவினர் ஈடுபட்டனர். அப்போது, மூதாட்டி ஒருவர் கம்பம் நடும் இடத்தில் படுத்துக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மேச்சேரி ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ், தங்கம், பேரூர் செயலாளர் பழனிசாமி ஆகியோருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாசில்தாருடன் கலந்தாலோசித்து கொடிக்கம்பம் நடுவதற்கு இடம் ஒதுக்கி தருவதாக உறுதி கூறினர். இதன்பேரில், அங்கிருந்து தேமுதிகவினர் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரமாக நிலவிய பதற்றம் தணிந்தது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை