போலி ஆணையுடன் பணியில் சேர வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு வாலிபர், அலுவலக உதவியாளர் பணி நியமனத்துக்கான ஆணையுடன் பணியில் சேர வந்துள்ளார். முதல்தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகரன் என்பவரை சந்தித்து, பணி ஆணையை வழங்கியுள்ளார். அதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கையொப்பம் இடப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ‘இது என்னோட கையெழுத்து இல்லை. தற்போது அலுவலக உதவியாளர் காலிபணியிடம் அறிவிப்பும் வெளியிடப்படவில்லையே’என்று கூறி விசாரித்தார். முன்னுக்குப்பின் பேசியதால் சந்தேகத்தில் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரிடமும், உடன் வந்த தந்தையிடமும் விசாரித்தனர். அதில், செஞ்சி அருகே களையூரைச்சேர்ந்த குமரேசன் (28). என்பது தெரியவந்தது. அவர் கூறுகையில், சென்னையில் பிபிஏ முடித்துவிட்டு, மறைமலைநகர் பகுதியில் வெல்டராக வேலை செய்தேன். அங்கு ஏழுமலை என்பவர் அறிமுகமானார். அவர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடம் இருப்பதாகவும், ரூ.2 லட்சம் கொடுத்தால் வாங்கி தருகிறேன் என்றும், வேலைக்கு சேர்ந்த பின் பணத்தை கொடுத்தால் போதும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, கடந்த 19ம் தேதி என் வீட்டிற்கு தபால் மூலமாக இந்த பணி ஆணை வந்தது. அதில், ‘25ம் தேதி காலை கலெக்டர் அலுவலகத்தில் பணியில் சேர வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, வந்ததாக தெரிவித்தார். மேலும் பணி ஆணை அனுப்பி வைத்த ஏழுமலையின் முகவரி தெரியவில்லை என்று குமரேசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து குமரேசனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஏழுமலையை பிடித்து விசாரித்தால்தான், குமரேசன் சொல்வது உண்மையா? என்று தெரியவரும். பின்னர் போலி நியமன ஆணையை தயாரித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்….

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்