போடியில் கழிவுநீர் கால்வாய் வசதி கோரி பொதுமக்கள் மறியல்

 

போடி, ஜூலை 9: போடியில் கழிவுநீர் கால்வாய் வசதி கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் போடி கீழத்தெருவில் உள்ள ஜமீன்தோப்பு சாலையில் சிறுசிறு சந்துகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மிகவும் குறுகிய வடிவிலான சாக்கடைகளால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சந்துகளில் தேங்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலையைத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதி வழியாக வாகனங்களில் செல்வோர் போடி கட்டபொம்மன் சிலை, தேரடி தெரு பகுதி சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.  இது குறித்து தகவலறிந்து வந்த போடி நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் நகராட்சி அலுவலர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி