பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை தேவை

 

க.பரமத்தி, மே 31: கரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர், கடைகள், கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கிராம புறங்களில் உள்ள சந்தைகள் போன்ற பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் அபராதம் விதிக்கப்படுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. கரூர் மாவட்டத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட சில நாட்கள் மட்டுமே சிகரெட் பிடிப்பதற்கு புகைப்பவர்கள் பயந்தனர். காலப்போக்கில் இச்சட்டம் குறித்து யாரும் கண்டு கொள்ளாததால் மீண்டும் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட், புகையிலை பொருட்கள் வினியோகிப்பது தவறு என சட்டம் உள்ளது. ஆனால் சிறியவர்களுக்கும் சிகரெட், புகையிலை போன்ற பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே முதலில் கடைகாரர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் என்ற சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றார். சுகாதாரத்துறையை சேர்ந்த பெயர் விரும்பாத ஒரு அதிகாரி கூறுகையில், சிகரெட் பிடிப்பது குற்றம் என்று பொது இடங்கள், கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை தடுக்க பொதுமக்களும் முன் வர வேண்டும் என்றார்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்