பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களின் கடை உரிமம் ரத்து

நாமக்கல், மே 18: நாமக்கல் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார். நாமக்கல் நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் தினசரி சேகரமாகும் கழிவுகளை, முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. சில கடைக்காரர்கள், சேந்தமங்கலம் ரோடு, பைபாஸ் சாலை, நரிக்குறவர் காலனி, புதுரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மோகனூர் ரோடு ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் வாகனங்களில் எடுத்துவந்து சாலையோரம் மற்றும் சாக்கடை கால்வாயில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து, நகராட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து இறைச்சி கடை உரிமையாளர்ளுடனான ஆலோசனை கூட்டம், நேற்று நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது.

இதில் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் பேசியதாவது: நாமக்கல் நகரிலுள்ள இறைச்சிக்கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளில் தினசரி சேகரமாகும் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த, தகுந்த ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்த விபரத்தை 7 தினங்களுக்குள் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். பொது இடங்கள், சாலையோரம் மற்றும் சாக்கடை கால்வாய்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும். மேலும், பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.
மீன் கடை உரிமையாளர்கள், மீன் கொண்டு வரும் தெர்மாகோல் பெட்டிகளை பைபாஸ் சாலைகள் மற்றும் சேந்தமங்கலம் ரோடு சாக்கடைகளில் வீசுகிறார்கள். அவர்கள் யார் என கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு நகராட்சி கமிஷனர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் பழனிசாமி, செல்வகுமார், பாஸ்கர் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், இறைச்சி, மீன்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை