பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை-அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு, வரும் 12ம் தேதி முதல் 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.    பொள்ளாச்சி நகரில் மத்திய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. இதில் வெகுதூர பகுதிகளான திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல், பழனி மற்றும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல  இடங்களுக்கு, மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் பஸ் இயக்கம் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட  பண்டிகை நாட்களிலும், முக்கிய விடுமுறை நாட்களிலும் பயணிகள் வசதிக்காக தொலைதூர இடங்களுக்கு கூடுதல் பஸ் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டில் வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி, மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தொலைதூர பகுதிகளுக்கு பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொங்கலை முன்னிட்டு  வரும் 12ந் தேதி  முதல் 15ந் தேதி வரையிலும். அதன்பின் 17 மற்றும் 18ம் தேதிகளிலும் என இரண்டு கட்டமாக  மத்திய பஸ்நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ் இயக்க உள்ளன. குறிப்பாக பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 60 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நேரத்தில் கூட்டத்தை பொறுத்து, வெளியூர்களுக்கு மேலும் கூடுதலாக சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.அதுபோல், மலை சார்ந்த பகுதியான வால்பாறைக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ் இயக்கப்படுகிறது. ஆழியார் மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு, பொங்கல் பண்டிகையையொட்டி 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும், எத்தனை பஸ்கள் இயக்கப்படலாம் என்பது குறித்து விரைவில் அட்டவணையிடப்படுகிறது.இதுகுறித்து அரசு போக்குவரத்து கிளைக்கழக அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சியிலிருந்து வெளியூர்களுக்கு முக்கிய பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ் இயக்கப்பட்டாலும், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து இருப்பதால், அந்நாட்களில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ் இயக்கப்படும். இந்த ஆண்டில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதிவரை பொங்கல் விடுமுறை என்றாலும், அதற்கு முன்னதாக 13 மற்றும் 14ம் தேதிகளில் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், தொலைதூர இடங்களுக்கு 12ம் தேதி முதல் கூடுதல் பஸ் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை அதிகபட்சமாக 50 பஸ்களே கூடுதலாக இயக்கப்பட்டது. இந்த முறை,  60 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். …

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்; புதிய இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்: ராமதாஸ் வேதனை