பெயிண்டர் சாவில் திருப்பம் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்காததால் கொன்றோம்: கைதான பிரபல ரவுடி, 17வயது சிறுவன் தகவல்

ஆவடி: பிறந்தநாள் விழாவுக்கு அழைக்காததால் ஏற்பட்ட தகராறில், பெயிண்டர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரபல ரவுடி, 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த செங்குன்றம், பம்மதுகுளம், சரத் கண்டிகை, நெல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (22). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி யாஸ்மின் என்ற மனைவியும், 9 மாத ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் வெங்கடேஷுக்கு இருதயக்கோளாறு பிரச்சனை காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  கடந்த 21ந்தேதி காலை வெங்கடேஷ் வீட்டிலிருந்து நண்பர்களை பார்க்க சென்றுள்ளார். பின்னர், அவர் மதியம் வரை வீட்டுக்கு வராததால், யாஸ்மின் அவரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது, அவர் விரைவில் வீட்டுக்கு வருவதாக யாஸ்மினிடம் கூறியுள்ளார். பின்னர், அன்று மாலை வெங்கடேஷுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டதாகவும், அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவும் ஜீவா என்பவர் யாஸ்மினுக்கு தெரிவித்தார். இதுகுறித்து, யாஸ்மின் ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் கணவர் வெங்கடேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், வெங்கடேஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெங்கடேஷ் முகத்தில் தாக்கப்பட்டு கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. போலீசார் தீவிர விசாரணையில், கூறப்படுவதாவது:- ஆவடி, காட்டூர் பகுதியைச் சார்ந்தவர் சத்தியமூர்த்தி (20), ஜீவா (21), 17வயது சிறுவன், ஆரிக்கம்பேடு கிராமத்தை சேர்ந்த யஸ்வந்த்(21) ஆவார்கள். அனைவரும் வெங்கடேஷின் நண்பர்கள். கடந்த 21ந்தேதி சத்தியமூர்த்திக்கு பிறந்தநாள். அவர் ஜீவா, வெங்கடேஷுடன் செங்குன்றத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடி உள்ளார். அப்போது, அவர்கள் அனைவரும் மது அருந்தி விட்டு காட்டூருக்கு வந்துள்ளனர். பின்னர், அங்குள்ள ஒரு கடையில் சிக்கன் பக்கோடா சாப்பிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த 17வயது சிறுவன், பிரபல ரவுடி யஸ்வந்திடம் சென்று, சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழாவிற்கு நம்மை அழைக்கவில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து யஸ்வந்த், சிறுவனுடன் அங்கிருந்து பைக்கில் காட்டூருக்கு வந்துள்ளார். பின்னர், அவர் சத்தியமூர்த்தி, ஜீவா ஆகியோரிடம் பிறந்தநாளுக்கு விழாவிற்கு எங்களை ஏன் அழைக்கவில்லை என கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், யஸ்வந்த் ஜீவாவை அடித்து உள்ளார். அப்போது, யஸ்வந்தை அடிக்காதே என கூறி வெங்கடேஷ் தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த யஸ்வந்த் வெங்கடேஷின் முகத்தில் குத்தி கீழே தள்ளி உள்ளார்.  இதில், மூக்கு உடைந்து பின் தலையில் அடிப்பட்டு வெங்கடேஷ் மயங்கி விழுந்து உள்ளார். அவரை நண்பர்கள் ஜீவா, சத்தியமூர்த்தி ஆகியோர் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர். பின்னர், பிரபல ரவுடி யஸ்வந்த்(21), மற்றும் 17வயது சிறுவன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதன் பிறகு, நீதிபதி உத்தரவின் பேரில் யஸ்வந்த் திருவள்ளூர் கிளைச்சிறையிலும், 17வயது சிறுவன் கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும்  அடைக்கப்பட்டனர். …

Related posts

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு