பெண்களுடைய முன்னேற்றத்துக்கு பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்: கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது என்று கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி (எஸ்ஐஇடி) தேசிய தர நிர்ணய குழுவின் A++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது: நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இந்த ஓராண்டு காலத்தில், மூன்று கல்லூரிகளில் நடைபெறக்கூடிய விழாவில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். அந்த மூன்று கல்லூரிகளும், பெண்கள் படிக்கக்கூடிய கல்லூரிகள் தான். அதுவும் இந்த ஒரு வார காலத்திற்குள்ளாக ராணி மேரி கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இன்று இந்த எஸ்ஐஇடி கல்லூரியில் நடைபெறக்கூடிய இந்த விழாவிலே பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.சென்னையில் ஆண்களுக்கு நிறைய கல்லூரிகள் இருந்தாலும், பெண்களுக்கு என்று தனியாக ஒரு கல்லூரி வேண்டும் என்ற மன உறுதியோடு இந்த கல்லூரியை ஆரம்பித்தவர் தான் நீதிபதி பஷீர் அகமது. இன்றைக்கு 7,500 மாணவிகள் இந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 50 சதவீதம் பேர் இஸ்லாமிய மாணவிகள். மீதியுள்ள 50 சதவீதத்தினர் அனைத்து மதங்களையும் சார்ந்திருக்கக்கூடிய மாணவிகள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவிகள் இங்கே அதிக அளவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், மதச்சார்பின்மையின் மறு உருவமாக இந்த கல்லூரி திகழ்ந்து கொண்டிருப்பது என்பது மிக சிறப்பு, தனி சிறப்பாக அமைந்திருக்கிறது.‘‘சமூகத்தில் ஒவ்வொருவரும் உயர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் இங்கே கல்வி போதிக்கப்படும்” என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த கல்லூரி, அனைத்து பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபடும் கல்லூரி. கல்வியுரிமைதான் பெண்ணுரிமையின் கண் போன்றது. அதனால்தான் “திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை” உருவாக்க “நான் முதல்வன்” திட்டத்தை அறிவித்து, அதை இன்றைக்கு நம்முடைய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை இன்றைக்கும் வரலாற்றிலே பேசக்கூடிய அளவிற்கு அவைகளெல்லாம் விளங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் சுய உதவிக்குழு என்ற மாபெரும் திட்டத்தை கலைஞர் 1989ம் ஆண்டு கொண்டுவந்து நிறைவேற்றி தந்தார். அதே வழி நின்று, பெண்களுக்கு கல்லூரி கல்வி வழங்கியே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் தான், அரசு பள்ளிகளில் படித்து, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய, பெண்கள் கல்வி நிதியுதவி திட்டத்தை அறிவித்து அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நமது அரசை போலவே, இந்த கல்லூரியும் பெண்களின் கல்வி உரிமைக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருவது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதாக அமைந்திருக்கிறது, பாராட்டுக்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏ த.வேலு, கல்லூரியின் தலைவர் மூஸா ரஸா, செயலாளர் பைசூர் ரகுமான் சையத், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஷானாஸ் அகமது, துணை முதல்வர் அம்துல் அஜீஸ், பேராசிரியை இ.சா.பர்வீன் சுல்தானா, டாக்டர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை