பெண்களிடம் பேராதரவு

கொரோனா பெருந்தொற்றால் அவதியடைந்து வந்த தமிழக மக்களுக்கு விடியலாய், ஆறுதலாய் வந்துள்ளது திமுக ஆட்சி. முதல்வர் பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் எந்தெந்த திட்டங்களில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக இருந்தது. அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, நகர பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை என 5 முக்கிய வாக்குறுதிகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். 5 திட்டங்களும் அம்சமானவை என்றாலும், நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்திட்டம் பெண்களிடம் பேராதரவை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு சுற்றுவட்டார 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் கூலி வேலைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு சுமார் ரூ.50 முதல் 100 வரை செலவிட வேண்டியிருக்கும். நாள்தோறும் உடல் வருத்த வேலை பார்க்கும் ஒரு பெண், தனது வருமானத்தில் பெரும் பங்கை பஸ் பயணத்துக்கே செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.100 நாள் வேலைத்திட்டம், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிக்கு செல்லும் பெண்களுக்கும் இதே நிலைதான். கணவரின் வருமானத்தோடு தானும் உழைத்தால்தான் 3 வேளை உண்ண முடியும் என்ற நிலை உள்ள ஒரு குடும்பத்திற்கு இந்த திட்டம் பாலை வார்த்துள்ளது. ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன்களை, தேதி, நேரம் குறிப்பிட்டு வீடு தேடி வந்து தரும் வகையிலான அறிவிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அரசு எந்த திட்டம் அறிவித்தாலும், அதை எதிர்க்கும் கட்சிகள் மத்தியில், ‘‘அட.. நல்லாயிருக்கே’’ என அவர்களே பாராட்டும் விதத்தில் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக நகர்த்திச் செல்கிறார். கொடுந்தொற்று காலத்தில் பதவி ஏற்றாலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் பணிகளும் அசர வைக்கின்றன. பதவியேற்கும் முன்ேப மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகள், பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளை சந்தித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறைகளை கேட்டறிந்தது, முழு ஊரடங்கு அறிவித்ததும் மக்களின் சிரமங்களை உணர்ந்து, சனி, ஞாயிறு சிறப்பு பேருந்துகளை இயக்கிய விதமும் மக்களிடையே ‘‘சபாஷ்’’ போட வைத்துள்ளது.இறையன்பு, உதயசந்திரன், ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட திறமையான, நேர்மையான அதிகாரிகளை உரிய இடத்தில் அமர்த்தியதும் வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசின் மந்தமான செயல்பாடுகளால், இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் நேற்று முதல் முழு ஊரடங்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒரு சிரமமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இதிலிருந்து நாம் விரைவில் மீண்டெழ வேண்டும். கொரோனாவை கண்காணிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாக வேண்டுமென முதல்வர் கருதுகிறார். அதை மனதில் ஏற்போம். அவசியமற்ற பயணங்களை தவிர்ப்போம். முகக்கவசம் அணிதல், சமூக விலகல் போன்ற கொரோனா விழிப்புணர்வை கடைப்பிடிப்போம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தி மாநில நலனை அரசுடன் இணைந்து மேம்படுத்துவோம். ஒன்றிணைவோம் அரசுடன்….

Related posts

பாஜ அரசின் அவலம்

அனல்பறந்த விவாதம்

முதல் எப்ஐஆர்