பெங்களூரு- கடலூருக்கு மினிலாரியுடன் 1.20 டன் குட்கா பறிமுதல் கடத்தல்: ஆற்காட்டில் 2 பேர் அதிரடி கைது

ஆற்காடு, மே 1: பெங்களூருவில் இருந்து கடலூருக்கு மினிலாரியில் கடத்திய 1.20 டன் குட்காவை ஆற்காடு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்ைட மாவட்டம், ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், உதயசூரியன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு வேலூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலை கீழ்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 132 மூட்டைகளில் மொத்தம் 1,200 கிலோ குட்கா, கூல் லீப் உட்பட ரூ.5 லட்சம் மதிப்பில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், கீழ்விஷாரம் புதுத்தெருவை சேர்ந்த விஜயகுமார்(52), திமிரி அடுத்த கருங்காலிகுப்பத்தை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேசன்(27) என்பதும், பெங்களூருவில் இருந்து கடலூருக்கு போதை பொருட்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிந்து விஜயகுமார், வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர், 2 பேரையும் ஆற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், தகவலறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை