பூண்டி ஏரி இணைப்பு கால்வாயில் விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி: திருவள்ளூர் அருகே சோகம்

சென்னை: திருவள்ளூர் அருகே விநாயகர் சிலையை கரைப்பதற்காக சென்ற 2 சிறுவர்கள், பூண்டி ஏரி இணைப்பு கால்வாயில் தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சிறுகடல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஷ்யாம் விக்னேஷ் (13). அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் மகன் மோனிஷ் (12). இருவரும் அங்குள்ள பள்ளியில் 8 மற்றும் 7ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மாலையில், இந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக, சிறுவர்கள் இருவரும் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் அருகே சென்றனர். அங்கு, கால்வாயில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கால்வாயில் விழுந்ததில், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அப்போது, காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து, சிறுவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர். உடனே இதுபற்றி தீயணைப்பு துறை மற்றும் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரமாகியும் கிடைக்காததால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு தேடியபோது, சிறுகடல் பகுதியில் மாணவர்கள் ‌ சடலமாக மிதந்தனர். உடல்களை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு செல்லும் கால்வாயில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ, குழந்தைகளுடனோ யாரும் போகக் கூடாது என மாவட்ட நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விநாயகர் சிலையை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு