புராணங்கள் உரைக்கும் மாசிமக நீராடல்

தெய்வங்களின் பெருமைகளையும் அவை வீற்றிருக்கும் தலங்களின் சிறப்புக்களையும் விளக்கத் தலபுராணங்கள் எழுந்ததைப் போலவே திருத்தலங்களில் ஒட்டி அமைந்துள்ள தீர்த்தங்களின் பெருமைகளை விளக்கிக் கூறச் சில புராணங்கள் தோன்றின. இவை ‘தீர்த்த புராணங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. காவிரியின் பெருமையை விளக்க எழுந்த நூல் ‘காவிரிப் புராணமாகும்’. பதினெண் மகாபுராணங்களில் ஒன்றான பிரம்ம வைவர்த்த புராணத்திலுள்ள செய்திகளை அடியொற்றித் திருமறைக்காடு சிற்றம்பல முனிவரால் 1474 பாடல்களால் இது பாடப்பட்டதாகும். காவிரி வாழ்த்துடன் தொடங்கும் இந்நூல் அனவத்தை என்பவளுக்கு அவனுடைய கணரான நாதசர்மா என்பவர் காவிரியின் வரலாற்றையும் சிறப்புக்களையும் விவரித்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. இதில் அனேக துணைக் கதைகளும் இடம் பெற்றுள்ளன.மேலும், 1939ம் ஆண்டில் ‘காவேரி ரகசியம்’ எனும் நூல் தொகுத்து வெளியிடப்பட்டது. காவேரியின் உற்பத்தித் திஸ்தானமாகிய சைய மலைகளில் தொடங்கிக் கடலோடு கலக்குமிடமான பூம்புகார் வரையிலுள்ள சைவ திருத்தலங்கள் வைணவ திருப்பதிகள் ஆகியவற்றின் சிறப்புகள் புராண, இலக்கிய, தோத்திர நூல்களிலுள்ள காவிரியைப் போற்றும் பகுதிகள், உபநதிகளின் கரையிலுள்ள திருத்தலங்கள் காவிரி ஸ்நானம் மற்றும் காவிரி பூஜா விதிகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இடையிடையே அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.தென்பாண்டி நாட்டினை வளப்படுத்தும் நதியான தாமிரபரணி ஆற்றின் பெருமைகளை விளக்க எழுந்தது ‘பொருனைப் புராணம் என்கிற தாமிரபரணி மகாத்மியம்’ ஆகும். இது பதிணென் புராணங்களில் ஒன்றாகிய சிவபுராணத்தினை அடியொற்றி எழுந்ததாகும். இதில் அகத்தியர் பெருமை அவர் தாமிரபரணியை உற்பத்தி செய்தது. அதன் கரையிலுள்ள தலங்களின் பெருமை, தீர்த்தமாடுவதின் மகிமை ஆகியன கூறப்பட்டுள்ளன.காளஹஸ்திக்கு வடக்கிலுள்ள பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகி ஆந்திரத்தை வளப்படுத்தும் பொன் முகலி ஆற்றின் பெருமையை ‘சொர்ணமுகி மகாத்மியம் விளக்குகிறது. இதில் திருமால் வீற்றிருக்கும் திருப்பதி, காளத்தியில் கொலுவிருக்கும் மணிகண்டீசர், காளத்திநாதர் முதலிய அனேக திருக்கோயில்களின் மகிமைகள் விளக்கப்பட்டுள்ளன.தனியாக எழுந்த புராணங்களைத் தவிர ஒவ்வொரு தல புராணத்திலும் தீர்த்த மகிமையை உரைத்தது எனும் பகுதியில் அந்த நாட்டில், தலத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம் முதலிய தீர்த்தங்களின் பெருமைகள், விரிவான குறிப்புகளும் அனேக தீர்த்தங்களின் பெருமைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. காஞ்சிப் புராணத்தில் கம்பா நதி, வேகவதி, சேயாறு முதலான ஆறுகளின் சிறப்புக்களும் காஞ்சிபுரத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்களின் சிறப்புக்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.தலபுராணங்களில் மட்டுமின்றி நாட்டுப்புற இலக்கியங்களிலும் அந்தந்த பகுதியிலுள்ள தீர்த்தங்களின் மகிமை விவரித்துக் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பச்சையம்மன் கதையில் சேயாறு உற்பத்தியாகி அம்பிகையின் பூசைக்கு உதவுவது, அதன் கரையிலுள்ள சப்தகரை கண்டங்கள், சப்த கயிலாயங்கள், இளையனார் வேலூர், கடம்பர் கோயில் முதலிய தலங்களின் பெருமைகள் விளக்கப்பட்டுள்ளன. புனித நீர்நிலைகளின் பெருமைகளை, மட்டுமின்றி மாதவாரியாக தீர்த்தமாடுவதின் பயன்களை விவரித்துக் கூறும் நூல்களும் உள்ளன. மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாசி மாதத்தை வடமொழியில் மாகமாதம் என்பர். மாசி மாதப் பௌர்ணமி நாளில் விதிப்படி நீராடுவது ‘மக நீராடல்’ ஆகும். மாக நீராடலின் மகத்துவங்களையும் விளக்க எழுந்த நூல் மாக புராணமாகும். இது வடமொழியிலுள்ள பதினெண்புராணங்களில் ஒன்றான பாத்ம புராணத்தின் ஒரு பகுதியாகும். இதனைத் தமிழில் சைவசிரோன்மணியாகிய அதிவீரராம பாண்டியர் 1412 பாடல்களால் பாடியுள்ளார். இதில் சிவராத்திரி மகிமை, கார்த்திகை மாத வழிபாடு, திருவாதிரை மகிமை உரைத்தது முதலான அனேக கதைகள் இடம் பெற்றிருப்பினும் வசிட்ட முனிவர் திலீபச்சக்ரவர்த்திக்கு மாசி மாத நீராடுதலின் பெருமைகளை விளக்கிக் கூறும் பகுதியே முதன்மை பெற்றுத் திகழ்கிறது. மாசி மாத நீராடுதலின் போது இப்புராணத்தை படிக்கச் சொல்லிக் கேட்பது, தென்பாண்டி நாட்டிலும் இலங்கையிலும் உள்ள வழக்கமாகும்.இந்தப் புராணத்தையொட்டி எழுந்த நூல் ‘மாகபுராண அம்மானை’.  மேற்படி நூலிலுள்ள கருத்துக்களே இந்த அம்மானைப் பாடலிலும் இடம் பெற்றுள்ளன. இதனை இயற்றியவர் மணவை வீரபத்திரனார் ஆவார். இது போன்றே ‘துலாஸ்நான மகிமை’ ‘துலாக் காவேரிப் புராணம்’ என்னும் நூல்களும் வெளிவந்துள்ளன. இவை துலாமாதம் என்கிற ஐப்பசி மாதத்தில் காவிரியில் தீர்த்தமாடுவதன் சிறப்புக்களை விவரித்துக் கூறுகின்றன. இதுபோன்ற அனேக நூல்கள் தீர்த்தங்களின் மகிமைகளையும் தீர்த்தமாடுவதால் உண்டாகும் பலன்களையும் தெளிவாகக் கூறுகின்றன.தொகுப்பு: ஆட்சி லிங்கம்   

Related posts

மதுரை ஏர்போர்ட் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

ஏகனாபுரம் கிராமத்தில் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவி