புதுவையில் கள்ள நோட்டுகள் புழக்கம் என்ஆர் காங். பிரமுகர் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு: முக்கிய புள்ளிகளை பிடிக்க சென்னை, கரூரில் தனிப்படைகள் முகாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் உள்பட 4 பேர் கும்பலை பிடித்து போலீசார் சிறையிலடைத்தனர். முக்கிய புள்ளிகளை பிடிக்க 2 தனிப்படை சென்னை, கரூரில் முகாமிட்டுள்ளது. புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் 2 பேர் கடந்த 7ம் தேதி மதுபானங்களை வாங்கி விட்டு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அதை கடை ஊழியரான பிரபாகரன் வாங்கி பார்த்தபோது கள்ளநோட்டு என தெரிந்தது. இருவரையும் பிடித்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சாரம், தென்றல் நகரை சேர்ந்த மனோஜ்குமார் (29), பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஜெயபால் (21) என்பதும், அவர்களிடமிருந்து ரூ.4,500 மதிப்பிலான கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மாரியம்மன் கோயில் தெரு சரண் (27) என்பவரையும், அவர் கொடுத்த தகவலின்பேரில் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெரு என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் மோகன் கமல் (31) என்பவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். ஒரிஜினல் நோட்டு ரூ.20 ஆயிரம் வாங்கி கொண்டு ரூ.50 ஆயிரம் கள்ளநோட்டுகளை மோகன் கமல் வழங்கியது தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ.2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 4 பேரும் மாஜிஸ்திரேட் முன்பு நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டு உடனே காலாப்பட்டு மத்திய சிறையிலடைக்கப்பட்டனர். இதில் முக்கிய நபரான மோகன் கமல், புதுச்சேரி பாஜவில் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சமீபத்தில் என்ஆர் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை வாங்கி வந்து புதுச்சேரியில் கடந்த 6 மாதங்களாக புழக்கத்தில் விட்டிருப்பது அம்பலமானது. இதனால் லட்சக்கணக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் புதுச்சேரி மாநிலத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தகவலின் பேரில் சென்னையில் உள்ள ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் இன்று உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து கள்ள நோட்டுகளை பார்வையிட்டு விசராணை நடத்த உள்ளனர். இதுபற்றிய மத்திய குற்ற புலனாய்வு படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மோகன் கமலுக்கு சென்னையில் இருந்து முக்கிய புள்ளி ஒருவர் கள்ள ேநாட்டுகளை அதிகளவில் சப்ளை செய்திருப்பது உறுதியாகி உள்ள நிலையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அவர்கள், சென்னை, கரூரிலும் முகாமிட்டு தமிழக காவல்துறையினருடன் கள்ளநோட்டு கும்பலை தேடி வருகின்றனர். இக்கும்பல் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ஒருவர் தனிப்படை வசம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மோகன் கமலுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்த முக்கிய புள்ளி சிக்கினால், இதன் நெட்வொர்க் குறித்த முழு தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன….

Related posts

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்