புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021ல் இருந்து 23 முகாம்களில் 3,690 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை, ஆக.27: புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற, சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று வழங்கினார். இம்முகாமில், கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்ததாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தி உள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

நேற்று நடைபெற்ற முதல் சிறப்பு முகாமில் 128க்கும் மேற்பட்ட வேலையளிப்போர் கலந்துகொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, உடனே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தாட்கோ போன்ற துறைகளால் சிறப்பு அரங்கங்கள் அமைக்கப்பட்டு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இவ்வேலைவாய்ப்பு முகாமுடன் இணைந்து நடத்தப்படும் இளைஞர் திறன் திருவிழாவின் மூலம் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட குறைந்தது 5 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த ஆண், பெண் இருபாலருக்கும் இலவச திறன் வளர்ப்பு பயிற்சியை அளித்திட உள்ளுர் மற்றும் வெளியூரில் உள்ள 15க்கும் மேற்பட்ட இலவச திறன் பயிற்சிகளை வழங்க கூடிய பல்வேறு பயிற்சிகளுக்கு பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மூன்று மாதம் முதல் 6 மாத கால பயிற்சிக்கு பின் தனியார் முன்னணி தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்சம் ரூ.13,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். திறன் பயிற்சி பெற்று வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பமுள்ளவர்களும் தங்களது பெயரினை பதிவு செய்து உரிய ஆலோசனை பெற்றுக் கொண்டனர். கடந்த 2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டுகளில் இதுவரை மகளிர் திட்டம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் 23 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 3,690 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். முத்துராஜா, சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முகாமில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) தேவேந்திரன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) மணிகண்டன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்