புதுக்கோட்டையில் அதிகரிக்கும் காய்ச்சல்

புதுக்கோட்டை, நவ.28: புதுக்கோட்டையில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 57 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரவலாக காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தொடக்கத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் அதிகாலை நேரத்தில் பனி பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. பருவமழைக் காலமாக இருப்பதால் கடந்த 4 நாட்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் தொற்றாளர்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது.

இதில், நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு மட்டும் டெங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 202 பேருக்கு டெங்குக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 75 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

சேலத்தில் 59.1 மி.மீ. மழை

டூவீலர் எரிந்து நாசம்

கோவை- லோக்மான்யதிலக் ரயில் 4 மணி நேரம் தாமதம்