புகையிலை பொருட்கள் விற்றால் பாகுபாடின்றி அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை

 

கோவை, டிச. 8: கோவை மாவட்ட சுதேசிய அனைத்து வணிகர்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை மாவட்ட செய்தி தொடர்பாளருமான எஸ்.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் புகையிலை பொருட்களான பான்பராக், மாணிக்சந்த் குட்கா, கூலிப் போன்ற புகையிலை பொருட்களை விற்கக்கூடாது என தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழக முழுவதும் சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கண்ட பொருட்கள் கைப்பற்றப்படுவது, அபராதம் விதிப்பது, அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டால் கடைகளுக்கு `சீல்’ வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்கிறது. தமிழகத்தில் புகையிலை பொருட்களை உபயோகிப்பவர்களைவிட, வடஇந்தியாவில் இருந்து தமிழகம் வருகை புரிந்து, வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக அளவில் உபயோகித்து வருகின்றனர். இப்பொருட்கள், தமிழகத்தின் கர்நாடகா எல்லை வழியாகத்தான் அதிகமாக பேருந்துகளிலும், பார்சல் வண்டிகளிலும் தமிழகத்திற்குள் ஊடுருவி வருகிறது.

எனவே, செக்போஸ்ட்களில் கடுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மொத்த வியாபாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பிலும் பரிசோதனை மேற்கொள்ளாமல், சிறிய கடைக்காரர்களை மட்டுமே குறி வைப்பதால், குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் மாஸ்க் அணியாத அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்தபோல, இந்த விவகாரத்திலும் பாகுபாடின்றி அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை