பி.எஸ்.பி.பி பள்ளி பாலியல் விவகாரம்; பள்ளி முதல்வர், தாளாளரிடம் விசாரணை

சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சென்னை கே.கே நகர் பள்ளியின் முதல்வர், தாளாளர் விசாரணைக்கு ஆஜராகினர். சென்னை கே.கே நகர் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுக்கள் வந்ததை அடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக 3 நாள் காவலில் எடுத்து தற்போது தீவிர விசாரணையானது நடந்து வருகிறது.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் வாக்குமூலத்தை ராஜகோபாலன் தொடர்ந்து அளித்து வருகிறார். இன்று மதியம் 3 மணியளவில் அந்த விசாரணையானது முடிவடைகிறது. இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணையை தாமாக கையில் எடுத்தது.
அந்த அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலா ராஜேந்திரன் இந்த புகார் தொடர்பாக முதன்முதலாக சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்ட மாணவி, முதன்மை கல்வி அலுவலர் அனிதா ஆகியோர் நேரடியாக ஆஜராகி இதில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தீர்கள் உள்ளிட்ட விவரங்களை நேரடியாக ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதன் அடிப்படியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணைய அலுவலகத்தில் தற்போது விசாரணையானது தொடங்கி இருக்கிறது. குறிப்பாக இன்றைய விசாரணையில் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமியும், உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், ராமராஜ், துரைராஜ் ஆகியோர் தற்போது பள்ளி தாளாளர் மற்றும் பள்ளியின் முதல்வர் இருவரிடமும் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் புகார் அளித்திருக்கக்கூடிய மாணவி, வெளிமாநிலத்தில் இருக்கின்ற காரணத்தால், வீடியோ கான்பரன்ஸ் முறையில் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒருமணி நேரமாக இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முக்கிய நோக்கம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏன் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தவறியது. குறிப்பாக புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை என்ற பல்வேறு கேள்விகளை தொடர்ந்து ஆணையமானது விசாரணைக்கு ஆஜராகி இருக்கும் பள்ளி முதல்வரிடமும், தாளாளரிடமும் விரிவான விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்