பிரதமரின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?: மத்திய அரசிடம் விளக்கம் அளித்தார் மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய்..!!

கொல்கத்தா: பிரதமர் மோடி தலைமையிலான புயல் நிவாரண ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது குறித்து முன்னாள் மேற்கு வங்க  தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் மத்திய அரசிடம் விளக்கம் அளித்துள்ளார். கடந்த மாத இறுதியில் யாஸ் புயல் மேற்குவங்க மாநிலத்தில் சேதங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து புயல் சேதம் மற்றும் நிவாரணம் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொல்கத்தாவில் அவசர கூட்டம் நடைபெற்றது.  இதில் தாமதமாக கலந்துக்கொண்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புயல் பாதிப்பு விவரங்களை கொடுத்துவிட்டு சில நிமிடங்களில் வெளியேறிவிட்டார். 
பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர்  அலபன் பந்தோபாத்யாய் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து அவரை தலைமை செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் அலபன் பந்தோபாத்யாய்யை விடுவிக்க மறுத்துவிட்ட மம்தா பானர்ஜி, அவரை மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகராக நியமித்துவிட்டது. தொடர்ந்து, பிரதமர் உடனான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு அறிவிக்கை அனுப்பியிருந்தது. 
இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் நோட்டீஸ்க்கு மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் நேற்று இரவு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்ததற்கு அலபன் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ள காரணங்களை உள்துறை அதிகாரிகள் ஆய்விட்டு வருகின்றனர். அவரது பதில் திருப்தி அளிக்காத பட்சத்தில் பேரிடர் மேலாண் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இதில் அலபனுக்கு 1 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Related posts

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்